“ஆர்.எம்.வீரப்பன் ஒருபோதும் பணத்துக்கு பின்னால் சென்றவர் கிடையாது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும், ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது” என நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 98. தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினி கூறுகையில், “நம்மை விட்டு சென்றுள்ளார் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர். அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேர், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.
ஆர்.எம்.வீரப்பன் ஒருபோதும் பணத்துக்கு பின்னால் சென்றவர் கிடையாது. அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது.
என் வாழ்நாளில் அவரை என்னால் மறக்கவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.