யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளியொருவர் வைத்தியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம், பிறவுண் வீதியில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தில், முழங்கால் வலிக்காக சிகிச்சைக்கு சென்ற ஒருவர், நோய்த்தொற்றுக்குள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பதிவு செய்யப்படாத சிகிச்சை நிலையத்தில் முழங்காலில் ஊசி ஏற்றப்பட்டதால், கிருமித் தொற்று ஏற்பட்டு, அவர் உயிரிழந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
பேஸ்புக் விளம்பரத்தை நம்பி, உயிரிழந்தவர் இந்த சிகிச்சை நிலையத்துக்கு சென்றிருந்தார்.
இந்த விவகாரம் தற்போது பொலிஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்த சிகிச்சை நிலையம் பரிசோதிக்கப்பட்ட போது, முறையான பதிவு இல்லாமல் இயங்கியதும், சிகிச்சையளித்தவர் அக்குபஞ்சர் சிகிச்சையளிக்கும் தராதரத்தை கொண்டிருக்காததும் தெரிய வந்தது. அவர் சிகிச்சை நிலையத்தை பதிவு செய்ய முயன்ற போதும், அது வெற்றியளித்திருக்கவில்லை.
பதிவு செய்யப்படாமல் இயங்குபவர்கள் போலி வைத்தியர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த சூழலில், அக்குபஞ்சர் சிகிச்சையாளர் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பாதிக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னரே உயிரிழந்தார் என்றும், அவரது மரணத்துக்கு தமது சிகிச்சை நிலையம் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமது சிகிச்சை நிலையத்தில் அந்த நோயாளி சிகிச்சை பெற்றவர் என்பதை தெரிந்ததும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நோயாளி கொலை செய்யப்பட்டு, தமக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தமது தனியார் வைத்தியசாலைகளிற்கு நோயாளிகள் வருவது குறைவதால் வைத்தியர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.



