போரில் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வடக்கு கிழக்கில் நடத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு” எதிராக அதிகபட்சமாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நேற்று (4) மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமன்னவினால், மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும்படி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த அறிவித்தலை விடுத்தார்.
எஸ்.யு.பி.கரலியத்த மற்றும் மாயாதுன்ன கோரயா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுவரையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரும் நீதிமன்றில் வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளதோடு, அதன் ஊடாக மாவீரர் துயிலுமில்லங்கள் தொடர்பான சட்டத்தை சிறந்த முறையில் அமுல்படுத்த பொலிஸார் பாடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இனிமேல் இவ்வாறான சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பில் அதிகபட்சமாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என நீதிமன்றில் உறுதிமொழி வழங்குவதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சட்டவிரோத செயல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
இதன்படி மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, மனு மீதான விசாரணையை முடித்துக் கொள்ள முடிவு செய்த மேல்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், பின்னர் மனுவை வாபஸ் பெற அனுமதித்தது.