தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஏகமனதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷவிடம் செய்தியாளர்கள் வினவியபோது, இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடி உரிய தீர்மானம் எடுப்பதாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் கொழும்பு டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
பண்டாரநாயக்கா கொள்கை, கட்சியின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி, ஐந்து பெரும் சக்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தாம் உரை நிகழ்த்தியதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வருகை தந்திருந்தார்.