திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கந்தளய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (29) 8.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் குறித்த நபர் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேலை, குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட குறித்த நபர் கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ள நிலையில் கணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிரோமாலா பெர்ணாந்து (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க (54வயது) என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.