தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்தி முகநூல் கணக்கை இயக்கி பயங்கரவாதத்தை மறுசீரமைக்க முயன்றார் என குற்றம்சாட்டப்பட்டு பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (28) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்றழைக்கப்படும் செல்வநாயகம் ஆனந்த வர்ணன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர், இராணுவவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்துகளில் வெடிகுண்டு வைப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வு தகவல் வழங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை பெற்றவர் என பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களின் படங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் பேஸ்புக் கணக்கை நடத்தி, பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு, அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பிரசாரம் செய்து வருவதாக செய்த முறைப்பாடு தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்ததுடன், சந்தேக நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.