ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பெரும் பிளவு தோன்றியுள்ளது. பெரமுனவில் உள்ள ஒரு பிரிவினர் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், மற்றைய பிரிவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேட்புமனுவை ஆதரிக்கிறார்கள்.
கடந்த பல மாதங்களாகவே இந்த பிளவு ஆரம்பித்தாலும், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிளவு வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. கட்சியின் செயற்குழு கூடியபோது, அவ்வாறானதொரு யோசனை தோன்றிய போதிலும், தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததால், மேலதிக கலந்துரையாடல் இடம்பெறவில்லை.
எவ்வாறாயினும், தற்போது அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய தகுதியான எவரும் இல்லை எனவும், எனவே கட்சி வேட்பாளரை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தேசிய அமைப்பாளராக நியமித்ததையும் அவர் பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலாக பசில் ராஜபக்ஷ அத்தகைய பதவியின் பொறுப்புகளை கவனித்து இருக்க வேண்டும் என்றார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதானிகள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி அதைச் செய்ய மறுத்துவிட்டார்.