கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் ஐந்தாவது நாளாக இன்று (29) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தனது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.