தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பலர் தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய அறிக்கை, கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
உபாலி அபேரத்ன ஆணைக்குழு என பொதுவாக அழைக்கப்படும் அரசியல் பழிவாங்கல்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. அவரது தரப்பினரை பாதுகாக்கவும், முன்னாள் அரசாங்கத்தை பழிவாங்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பு அது என்ற விமர்சனம் அப்பொழுதே எழுந்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, நீதியரசர் எம்.டி.எம்.லஃபர் மற்றும் நீதியரசர் டி.எம். சமரகோன் ஒருமனதாக அரசியல் பழிவாங்கள் தொடர்பாக ஆராய் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் கண்டுபிடிப்புகள் சட்ட அதிகாரத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என்று கூறினர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன மற்றும் ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் இந்த ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். .
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரசிறி ஜயதிலக மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் வீரசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர பிரதிவாதிகள்.
2015, நவம்பர் 16 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, FCID, CID மற்றும் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் ஜனவரி 8ஆம் திகதி முதல் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பின்னணி குறித்து விசாரணை செய்யும் பணி இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அப்பொழுது கோட்டாபய அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ரொனால்ட் பெரேரா மற்றும் எராஜ் டி சில்வா ஆகியோர் ஆஜராகினர். சரத் பொன்சேகாவுக்காக மல்லவாராச்சி அசோசியேட்ஸினால் அறிவுறுத்தப்பட்ட சட்டத்தரணி வினுர குலரத்ன மற்றும் ஜெசிகா அபேரத்ன ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மன் காசிம் ஆஜரானார். சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க ஆஜரானார்.