ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களை தமக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரிடம் இன்று (25) வாக்குமூலம் பெறவுவுள்ளது.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (24) முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.
இந்த சர்ச்சைக்குரிய தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தார்.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் திரு மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் தயாராக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களை தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கத் தயார் எனவும் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
அந்த வெளிப்பாட்டின் பின்னர், பல்வேறு அரசியல்வாதிகள், சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்கள் பற்றி முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியும் என்றும், ஆனால் அதனை வெளிப்படுத்தாதது பாரிய தவறு என்றும் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என சில அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, மற்றுமொரு கலந்துரையாடலில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் தமக்குக் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் வெளியிடப்படும் வெளிப்படுத்தல் நீதிமன்றத்தின் முன் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் வகையில் செய்யப்பட வேண்டுமென தாம் விரும்புவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதனை பகிரங்கமாக வெளிப்படுத்தினால் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அழிக்கப்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் ஜனாதிபதி வாக்குமூலம் வழங்க விரும்பாத பட்சத்தில் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.