வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (08.03.2024) சிறிலங்கா காவல் துறை மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட வழிபாட்டு உரிமை, உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் அன்றைய (08.03.2024) தினம் சிவராத்திரி வழிபாடுகளிற்குச் சென்றிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் சிறிலங்காவின் மனிதவுரிமை ஆணைகுழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று (20.03.2024) முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது.
சிவராத்திரி தினத்தன்று பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் வழிபாடுகளிற்காகச் சென்றிருந்த நிலையில் நீண்ட நேரம் வழிபாடாற்றுவதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு, செல்லும் பாதைகளெங்கும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு அனைவரும் அச்சுறுத்தல்களிற்கும் உள்ளாக்கப்பட்டு வழிபாட்டுரிமைகள் மீறப்பட்டிருந்தது. பெருமளவில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் பங்குகொண்டிருந்த பூசை வழிபாடுகளில் தாகத்திற்கு அருந்துவதற்காக கொண்டு சென்ற குடிநீரைக் கூட பறித்து ஊற்றியும், தாங்கியில் வைக்கப்பட்டிருந்த நீரைத் திறந்து விட்டும், நீரை உள்ளே கொண்டு செல்ல விடாமல் தடுத்தும் மனிதாபிமானத்திற்கு விரோதமான செயல்களில் சிறிலங்கா காவல் துறையினார் செயற்பட்டிருந்தமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.