அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய வெப் சீரிஸுக்கு ‘கேங்க்ஸ் குருதிப் புனல்’ (Gangs Kuruthi Punal) என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
மும்பையில் அமேசான் ப்ரைம் நிறுவனத்தின் சார்பில் ‘ஆர் யு ரெடி’ என்ற தலைப்பில் புதிய வெப் சீரிஸ்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழில் வெளியாக உள்ள க்ரைம் இணையத் தொடரான ‘கேங்க்ஸ் குருதிப் புனல்’ தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் சத்யராஜ், அசோக் செல்வன், நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 70-களின் பின்னணியில் நடக்கும் இக்கதை இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். தொடரை நோவா இயக்கியுள்ளார்.
இது தொடர்பான அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “கடத்தல்காரர்கள், வியாபாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் அடங்கிய இந்தத் தொடர், துரோகம் மற்றும் அதிகாரத்துக்கு இடையிலான அழுத்தமான கதையை பதிவு செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.