நடிகர் பப்லு என்கிற பிருத்வி ராஜ், தன்னுடைய 56 வயதில் மலேசியாவைச் சேர்ந்த ருக்மினி ஷீத்தல் என்கிற 23 வயது பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகயிருந்த விஷயம்.
ஆரம்பத்தில் இவர்களது விசயம் அரசல் புரசலாகப் பரவ, பப்லு இதை வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவித்து பல நேர்காணல்கள் கொடுத்தார். இதையடுத்து, பப்லு-ஷீத்தல் இருவரும் ஜோடியாக பேட்டியளித்து தங்கள் மீதான விமர்சனங்களைக்குப் பதில் கொடுத்திருந்தனர். பப்லு, தன் முதல் மனைவி பீனா, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட தன் 25 வயது மகன் மற்றும் 56 வயதில் மறுமணம் என தன் மீது வைக்கபட்ட விமர்சனங்கள் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.
பப்லு, ஷீத்தல் இருவரும் ஒன்றாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில், இருவருக்குமிடையில் பிரச்னை என்கிற தகவல் வெளிவரத் தொடங்கியது. ஷீத்தலும், பப்லுவுடன் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து முற்றிலுமாக நீக்கி, அங்கேயே பப்லுவுடன் தான் தற்போது தொடர்பிலில்லை என உறுதி செய்தார் ஷீத்தல்.
‘ஆமாங்க இவங்க கூடதான் நான் வாழுறேன், அதுல என்ன தப்பு’ என ஜோடியாகச் சேர்ந்து பேட்டி கொடுத்த போது பேசிய பப்லு, இருவருக்குமான பிரிதல் குறித்து எதுவும் பேசவில்லை. தற்போது, நீண்ட நாள்களுக்குப் பிறகு ஷீத்தல், தனது இன்ஸ்டாகிராமில் இது குறித்து ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “என் கடந்த கால வாழ்க்கைப் பற்றி பலரும் என்னிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கின்றனர். பலரும் என் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் நடந்தவற்றைத் தெரிந்துகொள்ளாமல் என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். பிருத்வியும் (பப்லு) நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால், இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம். இருவரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள். ஆனால், இது இருவரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து, எங்களுக்கான நேரத்தை எங்களுக்குக் கொடுக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.