நாட்டில் கண்டறியப்பட்ட காசநோயாளிகளில் இருவர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையில் தொற்றா நோய்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களினால் அதிகளவான மரணங்கள் பதிவாகின்றது எனவும், கடந்த 2023ஆம் ஆண்டு இலங்கையில் 9358 காசநோய்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிகளவான காசநோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பதிவாகும் காசநோயாளிகளில் பெரும்பாலானோர் கொழும்பு மாநகர சபையில் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், மாலையில் லேசான காய்ச்சல், எடை இழப்பு, பசியின்மை, அதிக இரவு வியர்வை, அதிக சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், சளியுடன் இரத்தம் வெளியேறுதல் போன்றவை.
காசநோய்க்கான பரிசோதனைகளை இலங்கையிலுள்ள அனைத்து மாவட்ட மார்பு மருத்துவ மனைகள் மற்றும் அரச சுகாதார நிலையங்களில் இலவசமாக மேற்கொள்ள முடியும் எனவும், மருத்துவ ஆலோசனையின்படி சரியான நேரத்தில் முறையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்நோயை முற்றாகக் குணப்படுத்த முடியும் எனவும் காசநோய் எதிர்ப்பு நடவடிக்கையின் பணிப்பாளர் டொக்டர் பிரமித சாந்திலதா தெரிவித்தார்.