வடமாகாண பிரதம செயலாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
வடமாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன தற்போது பொறுப்பு வகிக்கிறார். அவர் அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட போது, கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. சிங்களவர் ஒருவர் வடக்கு பிரதம செயலாளரா என தமிழ் அரசியல்வாதிகளும் எதிர்த்தனர். ஆனால் அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் கோட்டாபய ராஜபக்ச.
எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தவில்லை.
சமன்பந்துலசேனவும் தன் மீது எந்த விமர்சனமும் வைக்க முடியாதபடி பணியாற்றியிருந்தார்.
தற்போது புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு பிரதம செயலாளர் பொறுப்பில் புதியவர் ஒருவரை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதும் இது பற்றி ரணில் பிரஸ்தாபித்திருந்தார். வடக்கு பிரதம செயலாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென தமிழ் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்த போது, தமிழ் பேசத் தெரிந்த ஒருவரே கண்டிப்பாக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வடக்கு பிரதம செயலாளராக, இளங்கோவன் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது. பிரதம செயலாளர் விவகாரம் விரைவில் அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.