24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
சினிமா

“எனக்கு ‘அறிவுத் தந்தை’ ஆக திருமாவளவன்…” – மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

“‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது” என இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை சார்பில் ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள்’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விருது பெற்ற பேசிய மாரி செல்வராஜ் மேடையில் பேசுகையில், “மாமன்னன் படத்துக்காக இந்த விருது என சொன்னார்கள். அந்தப் படம் வெளியான முதல் காட்சி முடியும்போதே அதற்கான விருதுகளை கொடுத்துவிட்டார்கள்.

‘பரியேறும் பெருமாள்’ வெளியாகி மக்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு முதல் விருதை பாரதிராஜா கையில் வாங்கினேன். அப்போது அந்த விருதை வாங்கி திரும்பும்போது, அங்கே திருமாவளவன் இருந்தார். அந்த விருதை நான் அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கி என்னை அரவணைத்துக்கொண்டார். என் வாழ்வில் மிகச் சிறந்த தருணமாக அதை நினைக்கிறேன். என் வாழ்வின் முதல் விருதை திருமாவிடம்தான் கொடுத்தேன்.

என்னுடைய படங்களின் திரைக்கதையை நான் ஒருபோதும் என் மனம் போன போக்கில் எழுதியது கிடையாது. எதிரிகளை மனதில் வைத்து தான் ஒவ்வொரு திரைக்கதையை எழுதுவோம். அவர்களை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் தான் திரைக்கதை எழுதப்படும்.

எப்போதெல்லாம் என் மனம் உடைந்து, ஒரு காட்சியை எழுதும்போது, இந்த காட்சி வெளியே வந்தால் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என யோசித்துக் கொண்டிருக்கும்போது, திருமாவளவன் பேசும் வீடியோக்களை பார்ப்பேன். ஏனென்றால், அந்த வீடியோக்களில் என்னிடம் இருக்கும் ஆத்திரத்தைக் காட்டிலும் பெரிய ஆவேசம் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி நிதானம் அதிக அளவில் இருக்கும். அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நிதானமும், ஜனநாயகமும் அவரின் பேச்சில் இருக்கும். நிதானம் தவறிய பேச்சு துளியும் திருமாவளவனிடம் இருக்காது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாதது. அதனை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது. அதற்கு சென்சார் போர்டு அனுமதிக்காது. நிஜத்தையே சென்சார் போர்டு அனுமதிக்காது. கோபத்தை எங்கே அனுமதிக்கப்போகிறது. நான் பதிவு செய்ததது எல்லாம் நிஜம். நிஜத்தின் வடிவம். கோபத்தை பதிவு செய்தால் அது வேறொன்றாக இருக்கும்.

ஆனால், அதைவிட அவசியம் அடுத்த தலைமுறையினரை புரிதலுக்கு உள்ளாக்குவது. அதை உணர்த்தியவர் திருமாவளவன். நான் இயக்கிய 3 படங்கள் குறித்தும் என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் திருமாவளவன். அதேபோல என் பெயரை முன்வைத்து நடக்கும் சம்பவங்களின்போதும், அப்பாவின் இடத்திலிருந்து எனக்கு ‘அறிவுத் தந்தை’யாக என்னிடம் பேசியிருக்கிறார் திருமாவளவன்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment