தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சிவாஜிலிங்கம் சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் முன்வைத்த ஆட்சேபணைகளை கருத்தில் எடுத்த கொழும்பு மேல் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
தியாகி திலீபன் நினைவேந்தலை கோண்டாவிலில் அனுட்டித்ததாக குற்றம்சாட்டி, சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் ஆட்சேபணைகளை பெப்ரவரி 24ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சிவாஜிலிங்கத்துக்கு எதிரான குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்ட விடயங்கள் அரசியலமைப்புக்கும், பயங்கரவாத தடைச்சட்ட விதிகளுக்கும் முரணானது என ரட்ணவேல் தாக்கல் செய்த ஆட்சேபனையில் குறிப்பிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.