இலங்கையை உலுக்கிய கொடிய கொலைகளின் பின்னணியில் செயற்பட்ட இராணுவச்சிப்பாய்கள்… மர உச்சியில் பதுங்கியிருந்த ஒருவர் சுட்டுக்கொலை!

Date:

பாதாள உலக போதைப்பொருள் வியாபாரியான வெல்லே சாரங்கவின் மைத்துனரான வர்த்தகர் எச்.டி.சுனில் (உக்குவா) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ கோப்ரலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற இராணுவத்தின் ஓய்வுபெற்ற லான்ஸ் கோப்ரல் நேற்று (28) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த ஓய்வுபெற்ற லான்ஸ் கோப்ரல் சூரியவெவ அடிகஹ ஏரிக்கு அருகில் உள்ள வாடி ஒன்றில் பதுங்கி இருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொழும்பு ஜயவர்தனபுர முகாமின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையின் விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது. சந்தேக நபரை கைது செய்து அழைத்துச் செல்லச் சென்ற போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேகநபர் இருளில் தங்கியிருந்த மர உச்சியிலமைத்த வாடியை அதிகாலையில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் விசேட அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அத்தேபிட்டிய, வலஸ்முல்ல, தொடம்கஹஹேனையில் வசித்து வந்த 44 வயதுடைய கபாலகே நுவன் லக்ஷித என்ற ஓய்வுபெற்ற இராணுவ கோப்ரல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மோதியதில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த அவரை உடனடியாக சூரியவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்த போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். ஓய்வுபெற்ற லான்ஸ் கோப்ரலின் நிரந்தர முகவரி செனுல் நிவேசா, வலவ்வத்தை, தெற்கு கனுமுல்தெனிய, மீல்ல, ஹக்மான என விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இந்த லான்ஸ் கோப்ரல் சுமார் 25 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றி ஜனவரி 15ஆம் திகதி ஓய்வு பெற்றதாக விசேட அதிரடிப்படை குறிப்பிடுகிறது.

துப்பாக்கிச் சண்டையின் போது, ​​விஷேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் ஒருவர் மரத்தில் தலை மோதி காயமடைந்ததுடன், அவரும் சூரியவெவ வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் டுபாய் நிபுண என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 21ஆம் திகதி மஹாபா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல வந்த மோட்டார் சைக்கிளை இவர் ஓட்டிச் சென்றார். அந்த நபர் சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடிஹக ஏரிக்கு அருகில் உள்ள வாடி ஒன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்து, குறித்த நபரை கைது செய்யச் சென்ற வேளையில், சந்தேக நபர் உடனடியாக அதிரடிப்படையினர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். பதில் தாக்குதலில் காயமடைந்த நபர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேகநபர், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி வெல்லம்பிட்டிய கிட்டாம்பஹுவில் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரையும், கடந்த வருடம் ஜூன் 17 ஆம் திகதி செனிகம விகாரைக்கு அருகில், சக்திவாய்ந்த பாதாள உலக போதைப்பொருள் வியாபாரியான ரத்கம விதுரவின் சகோதரரான ரத்கம உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் துலாஜ் தரங்கவையும் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் சக்திவாய்ந்த போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகத் தலைவருமான கொஸ்கொட சுஜீயே ஈடுபட்டுள்ளார். அவர் டுபாயில் இருந்து கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்த கொலைகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. வெல்லம்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இந்தியாவில் தங்கியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ரவி திபனின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த லான்ஸ் கோப்ரல் இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த போதே அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஹாபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலப்பிட்டிவல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் என்றும், இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் ரெஜிமென்ட் இலக்கம் – எஸ்/412530 ஆக பணியாற்றி 15/01/2024 அன்று ஓய்வு பெற்றவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நபர் தெற்கு கனுமுல்தெனிய, மீல்ல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடையவராவார். ரிவோல்வர் ரக துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொருட்கள் சூரியவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராகம வெல்லே சாரங்கவின் மைத்துனரான வர்த்தகர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை ஆரம்பித்த போது, ​​கொலையாளிகள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கர வண்டியொன்றும் உதவிக்கு வந்தது தெரியவந்துள்ளது.   முச்சக்கரவண்டியை அடையாளம் கண்ட விசேட அதிரடிப்படையினர், அதன் சாரதியிடம் விசாரணை நடத்திய போது, ​​டுபாயில் வசிக்கும் நிபுண என்ற பாதாள உலகக் குற்றவாளியின் அறிவுறுத்தலின் படியே அவர் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, முச்சக்கர வண்டி சாரதியும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்ட விசேட அதிரடிப் படையினர், நீண்ட நேர விசாரணையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை ஒருங்கிணைத்து இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மற்றுமொருவர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்த முடிந்தது.

செங்கலடி முகாமிலிருந்து தப்பிச் சென்று சிக்கிய இராணுவ கோப்ரல்

இதன்படி, விசேட அதிரடிப்படை குழுவொன்று ஹக்மன உடவத்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த நபர் இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் ஆயுதப் புலனாய்வுப் படையில் பணியாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைகளின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை அவர் ஒருங்கிணைத்து இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் ஹக்மன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அன்று இரவு 11.00 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்ய சென்ற போது, ​​துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி பொலிஸார் துரத்துவதாக எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பிடிக்க விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பலனாக அவர் பதுங்கியிருந்த இடம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவரை கைது செய்ய செல்லும் போதே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி இரணுவச்சிப்பாய் தப்பிச் செல்லும் போது ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரை விசேட அதிரடிப் படையினர் அடையாளம் காண முடிந்தது. அதன் பிரகாரம் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இராணுவத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த கோப்ரல் எனவும், மட்டக்களப்பு செங்கலடி முகாமில் பணிபுரியும் போதே இக்கொலையைச் செய்து முகாமிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்தது.

இவர் கடந்த 21ஆம் திகதி அதிகாலை செங்கடடியில் இருந்து பயணிகள் பேருந்தில் ஏறி வத்தளையில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு தொழிலதிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைக்குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலைக்கு உதவியதாக 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இக்கொலையில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளும் இராணுவத்தினர் எனவும், கொலைக்காக மூவருக்கும் 3 இலட்சம் ரூபா பணம் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்