நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட தலவாக்கலை கிரேட்வெஸ்டன் பகுதியில் நீர்த்தேக்கம் அமைப்பதுக்கு எதிராக கிரேட்வேஸ்டன் தோட்ட மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று புதன்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்கந்த வத்த, காட்டுமாரியம்மன் ஆலய வளாகத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஆற்றிலிருந்து வரும் நீரை லூசா,கல்கந்தை,ஸ்கல்பா மலைதோட்டம் ஆகிய பகுதி மக்கள் உபயோகப்படுத்தியிருந்த நிலையில் தலவாக்கலை பகுதிகளுக்கு நீரை மாற்றி அனுப்ப நீர்வழங்கள் அமைச்சின் ஊடாக செயற்பாடுகள் முன்னெடுத்து வருவதாக கூறியே குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தலவாக்கலை நீரேற்று நிலையம் தற்போது தலவாக்கலை லிந்துல பிரதேசத்தில் வசிக்கும் பாவனையாளர்களுக்கு குடிநீர் வழங்குவதுடன், அப்பகுதியில் வசிக்கும் புதிய நுகர்வோருக்கு குடிநீரை வழங்குவதற்காக நீர் வழங்கல் சபையினால் ஒப்பந்ததாரர் மூலம் நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலவாக்கலை நீர் நீரேற்று நிலையத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொள்ளும் அணைக்கு மேலே இருந்து பாயும் நீரானது அதன் கீழே திருப்பி விடப்பட்டு தமது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அணையை மேலும் மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் அன்றாட தேவைக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.
அத்துடன், தமது தோட்டத்தில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்கு வழங்க நீர் வழங்கல் சபைக்குத் தேவையான நீரை எடுத்துச் செல்வதற்கும் எஞ்சிய நீரை தலவாக்கலை நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கும் எவ்வித தடையும் இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாக கிரேட்வெஸ்டன் பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




