தமிழ் தேசியம் வீழ்ச்சியடையாது, தமிழ் தேசிய காவலன் தலைமையேற்று விட்டார் என்பதை பிரச்சாரம் செய்யும் மற்றொரு நிகழ்வு வரும் 25ஆம் திகதி தென்மராட்சி, கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நடைபெறவுள்ளது.
இதை ஒழுங்கு செய்வதென்னவோ, உலக தாய்மொழி ஏற்பாட்டுக்குழு என்ற பெயரிலான ஒரு குழு.
இந்த குழுவின் ஒழுங்கமைப்பில்- தமிழ் தேசிய எழுச்சி நாள் என்ற பெயரில், வரும் 25ஆம் திகதி கொடிகாமத்தில் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஏற்பாட்டு குழு- உலக தாய்மொழி ஏற்பாட்டு குழு. நிகழ்வின் பெயர்- தமிழ் தேசிய எழுச்சி நாள்.
நமது சமூக ஊடக ஆர்வக்கோளாறுகளையும், கட்சியின் உணர்ச்சிப் பிளம்புகளையும் தமிழ் தேசிய பித்து நிலைக்கு கொண்டு செல்ல தயாராகும் மற்றொரு ஐயிற்றமே இந்த நிகழ்வு. உலக தாய் மொழி ஏற்பாட்டு குழுவென்ற பெயரில், சிறிதரனின் பி அணி தயாரிக்கவுள்ள மற்றொரு தமிழ் தேசிய சாம்பாரே இந்த நிகழ்வு.
நிகழ்வில் தமிழ் தேசியம் என்ற பெயரில் கட்சி அரசியல் செய்து கொண்டிருக்கும் பிரமுகர்களையும் அழைத்து மேடையில் உட்கார வைத்து, உரையாற்ற வைத்து- தமிழ் தேசியத்தை காப்பாற்ற வந்த நவீன தேசியத் தலைவர் என்ற பிம்பத்தை சிறிதரனிற்கு அணிவிக்கும் தொடர் நிகழ்வின் மற்றொரு அங்கமே இந்த நிகழ்வு.
இது குறித்து, அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தமிழ் பக்கத்துடன் பேசிய நிகழ்வின் ஏற்பாட்டாளர் ஒருவர், நிகழ்வுக்காக சுமார் 10- 15 இலட்சம் ரூபா செலவிட உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார். மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்து பேருந்துகளில் ஆட்களை அழைத்து வருவதற்கும், அவர்களின் உணவுக்காகவும் கணிசமான நிதி செலவிடப்படவுள்ளது.
எம்.ஏ.சுமந்திரனை முன்னிறுத்தி கனடாவிலுள்ள கிழவர்கள் சிலர் அரசியல் செய்கிறார்கள் என்ற விமர்சனம் உள்ளது. அதற்கு சற்று குறைவில்லாமல். சிறிதரனை தேசியத் தலைவராக்கும் நாடகத்துக்கும் வெளிநாட்டு நிதியுதவி தாராளமாக கிடைக்கிறது. தற்போது கனடாவிலிருந்து வந்துள்ள அகிலன் முத்துக்குமாரசுவாமி என்பவர், கட்சியின் பொருளாளர் பதவியை பெற தலைகீழாக நடந்து பார்த்தார். கிடைக்கவில்லை. இருந்தாலும், சற்றும் மனம் தளராக விக்கிரமாதித்தன் போல, சிறிதரனை தேசியத் தலைவராக்கும் நாடகத்தின் பின்னணியில் செயற்பட்டு வருகிறார். அதுதவிர, ஐபிசி நிறுவன உரிமையாளர், டான் தொலைக்காட்சி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் சிறிதரனை தேசியத்தலைவராக்க படாதுபாடுபடுபவர்கள்.
ஐபிசி பாஸ்கரன் நீண்டகாலமாக சிறிதரனின் அரசியலுக்கு நிதியுதவியளிப்பவர். இறுதியாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்த போது, தமிழ் அரசு கட்சிக்கு நிதியளிக்கவில்லை. கிளிநொச்சியில் போட்டியிட்ட சிறிதரன் குரூப்பிற்காக செலவிட 10 இலட்சம் ரூபா கொடுத்திருந்தார். அந்த பந்தம் தொடர்கிறது.
டான் தொலைக்காட்சி உரிமையாளர் குகநாதனும், சிறிதரனை தேசியத் தலைவராக்க பாடுபடுகிறார். அதற்கு ஒரேயொரு எளிய காரணமேயுள்ளது. அது- ‘தீவானை தீவான் காமுறுவான்’ என்பதே.
எதிர்காலத்தை திட்டமிடாமல்- சம்பந்தனின் நிழலில் இருந்தபோது நிலவிய சூழலே அரசியல் என தவறாக கணித்த சுமந்திரன், தன்னைப் பற்றி உருவாக்கிய பிம்பம்- இப்போது சிறிதரனுக்கு வாய்ப்பான களத்தை உருவாக்கியுள்ளது.
எந்த போட்டியாயினும், தமிழ் தேசிய காவலன் சிறிதரன், சிங்கள நண்பன் சுமந்திரன் என்ற கருத்து நிலை உருவாக்கப்பட்டு, வாக்காளர்கள் மயக்கமுறும் சூழலே சில காலத்துக்கு நீடிக்கும்.
ஆயினும், யதார்த்தம் அப்படியல்ல. சுமந்திரன் தமிழ் தேசிய விரோதியென்றால்… சிறிதரன் தமிழ் தேசியவாதியென்றால்- அவர்கள் தமிழ் தேசியத்தை- தேசியம் என்றால் என்னவென்பதை எப்படி புரிந்து வைத்துள்ளனர் என்ற கேள்வியெழும்.
மாவீரர்தினத்துக்கு சிறிதரன் விளக்கேற்றுகிறார். சுமந்திரன் ஏற்றுவதில்லை. எமது தேசியத் தலைவர் பிரபாகரன் என தொடங்கி, திலீபன் ஆட்டுக்குடல் வைத்திருந்தார் என்பது மாதிரியாக அடித்து விடுவார் சிறிதரன். தென்னிலங்கை ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்- நான் ஆயுதப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லையென்கிறார் சுமந்திரன்.
இதற்குள் இருவருக்குமிடையில் எங்கே கருத்து ரீதியான மாறுபாடு ஏற்பட்டுள்ளது? விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை போன்றவர் சுமந்திரன் என, சிறிதரனே பகிரங்கமாக கூறி விட்டார். சுமந்திரனின் தேர்தல் வெற்றிக்காக சிறிதரனே பாடுபட்டார். அப்போது கட்சித் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவின் வெற்றிக்காக எந்த சிறு துரும்பைத் தன்னும் தூக்கிப் போடாத சிறிதரன், சுமந்திரனின் வெற்றிக்காக உழைத்தார்.
இப்போது மட்டும் சிறிதரன் தியாகியாகவும், சுமந்திரன் துரோகியாகவும் எப்படி மாறினார்கள் என்பதை, உலக தாய்மொழி ஏற்பாட்டு குழு விளங்கப்படுத்த வேண்டும்.
கடந்த தேர்தலில் சுமந்திரனின் வெற்றிக்காக சிறிதரன் உழைத்தார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று- சுமந்திரன் உண்மையிலேயே அன்ரன் பாலசிங்கம், அவர் கட்சிக்கு தேவை. மற்றையது- நிதி உள்ளிட்ட அனுசரணைகளுக்காக சுமந்திரனை ஆதரித்தார். இதைவிட, மூன்றாவதாகவும் எதேனும் காரணமிருந்தால், அதை உலக தாய்மொழி ஏற்பாட்டுக்குழு விளக்க வேண்டும்.
சுமந்திரன் தென்னிலங்கை மைய சிந்தனையுடையவர், தெற்கு அரசியல்வாதிகளுடன் அதிக தொடர்பில் இருக்கிறார் என்பதும் சிறிதரன் தமிழ் தேசியவாதிகளின் இன்னொரு குற்றச்சாட்டு. தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருப்பது ஒரு ஆசாரக் கேடான விடயமாக கொள்ள முடியாது. ஆனால், அரச புலனய்வு பிரதானிகளுடன் சிறிதரனுக்கு நெருங்கிய தொடர்புண்டு என நீண்டகாலமாக அவரது எதிராளிகள் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுவதுண்டு.
இந்த ‘தொடர்பு’ விவகாரம் பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உள்ளன. ஆனால் சிறிதரனை சங்கடப்படுத்துவது நமது நோக்கமல்ல. தமிழ் தேசியத்தின் பெயரால் நடக்கும் தெருக்கூத்துக்களை சுட்டிக்காட்டுவது மட்டுமே நமது நோக்கம்.
சிறிதரனும், சுமந்திரனும் 14 வருடங்களாக ஒரே கட்சியில் உள்ளனர். கட்சி எடுத்த எல்லா அரசயல் முடிவுகளையும் இருவரும் ஏற்றனர். முடிவுகளில் பங்களித்தனர். ஒன்றாக பணியாற்றினர். இதில் ஒருவர் மட்டும் தியாகியாகவும், மற்றையவர் துரோகியாகவும் முடியும்? ஒன்றில்- இருவரும் தியாகியாக இருக்க வேண்டும், அல்லது துரோகியாக இருக்க வேண்டுமல்லவா!
விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து, பயிற்சி முகாமிலிருந்து சிறிதரன் ஓடிச்சென்றார் என சொல்லப்படுவதுண்டு. மாவீரர் ஒருவரின் சகோதரியை திருமணம் செய்தார், வன்னியில் அரச பணியாற்றினார் என்பது மட்டுமே ஒருவரை தமிழ் தேசியவாதியாக்கி விடுமா?
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் குழு மோதல், அதிகார போட்டிக்கு தமிழ் தேசிய முலாத்தை பூசுவதும், தமிழ் தேசியத்துக்கு எதிரான செயலே. தமிழ் தேசியம் என்றால் என்னவென்பதை தாமும் அறியாமல், புதிய தலைமுறையினருக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி, தமிழ் தேசியம் என்ற வார்த்தையை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யலாமென்ற தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை உலக தாய்மொழி ஏற்பாட்டுக்குழு புரிந்து கொள்ள வேண்டும்.