‘கங்குவா’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். இதையடுத்து, மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் ‘கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்குகிறார். இதில் திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கான டெஸ்ட் ஷூட் 2 முறை நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சூர்யாவுடன் ஜான்வி நடிப்பதை அவர் தந்தை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “என் மனைவி தேவி பல மொழிகளில் நடித்தார். என் மகள் ஜான்வியும் அவ்வாறு நடிப்பார் என்று நம்புகிறேன். இப்போது ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக ‘தேவரா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் ஒவ்வொரு நொடியையும் அவர் அனுபவிக்கிறார். அடுத்து ராம் சரண் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இப்போது அதிகமான தெலுங்கு படங்களைப் பார்த்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அவர் விரைவில் சூர்யாவுடனும் நடிக்க இருக்கிறார்” என்றார்.