தனது கட்சிப் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமிழக வெற்றி‘க்’ கழகம் என்று அதிகாரபூர்வமாக திருத்தம் செய்துள்ளார் நடிகர் விஜய்.
கடந்த ஆண்டு முதலே அரசியல்ரீதியான நிகழ்வுகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த நடிகர் விஜய், கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். முன்னதாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தார். விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்னொருபுறம், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அவரது கட்சியின் பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல இன்று கொடுக்கப்பட்ட செய்தித் தாள் விளம்பரங்களிலும் கூட தமிழக வெற்றிக் கழகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.