பெண் குழந்தைகள், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வது கடுமையான குற்றமாக கருதப்பட்டு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதை போலவே, ஆண் குழந்தைகளை பலாத்காரம் செய்வதும் குற்றமாக கருதி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை நீதி அமைச்சு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
இதுவரை, ஆண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என வகைப்படுத்தப்பட்டு, அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சட்ட நடைமுறைகள் உள்ளன.
ஆண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படும் அபாயகரமான சம்பவங்கள் மற்றும் குற்றம் தொடர்பான சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆண் கற்பழிப்பைக் குற்றமாக கருதும் வகையில் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ் தெரிவித்தார்.
இது தவிர, சட்டரீதியான பாலியல் வல்லறவு தொடர்பான சட்டங்களையும் நீதி அமைச்சு திருத்துகிறது. தற்போது, 16 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்வது-அவருடைய சம்மதத்துடன் அல்லது இல்லாமலே- சட்டப்படி பாலியல் வல்லறவுக்கு சமம். இருப்பினும், காதல் உறவின் காரணமாக இந்த பராயத்தில் இருவரின் சம்மதத்துடன் உடலுறவு கெள்ளும் சம்பவங்கள் பல இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
அதன்படி, 14-16 வயதுடைய சிறுமிகள் மற்றும் 22 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இடையிலான சட்டப்பூர்வ பாலியல் வல்லுறவு வழக்குகள் தொடர்பாக தீர்ப்பு வழங்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது. தற்போது, சட்டப்படி பாலியல் வல்லுறவுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையே காதல் உறவு இருந்ததாகவும், அவர்கள் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றம் திருப்தி அடைந்தால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்க உயர் நீதிமன்றத்திற்கு இந்தத் திருத்தம் உதவும்.
14-16 வயதுடைய பெண்கள் மற்றும் 22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இடையேயான காதல் உறவுகளின் விளைவாக நிகழும் ஒருமித்த உடலுறவு சட்டத்தின் அடிப்படையில் பாலியல் வல்லுறவு என்று கருதப்படுவதாகம், நடைமுறை மற்றும் கருணை அடிப்படையில் இந்த திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் அவர் கூறினார்.