தமிழரசு கட்சியின் உட் கட்சி விவகாரம் தீர்க்கப்படாது தொடருமாக இருந்தால் பலர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையக் கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்தார்
தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
74 ஆண்டுகளாக பயணித்த தமிழரசு கட்சியில் முதல் முதலில் தலைவர் தெரிவில் போட்டி இடம்பெற்று பெரும் குளறுபடிகள் இடம் பெற்று தலைவர் தெரிவு இடம் பெற்றமை என்பது துரதிஷ்டமான விடயம்
என்னைப் பொறுத்தவரை தமிழரசு கட்சியினுடைய ஆரம்ப கால உறுப்பினர்களாக இருந்து வளர்ச்சி அடைந்து வந்த ஆட்கள் என்று கடைசியாக இருக்கின்றவர்கள் திரு சம்மந்தன், திரு மாவை சேனா ராஜா அவர்கள் தான். ஏனையவர்கள் எல்லோரும் பின்னர் நடுப்பகுதியிலே பிற்பகுதியில் வந்து இணைந்தவர்கள் தான். தலைவர் தெரிவில் போட்டியிடக் கூடியவர்கள் கூட கடந்த 10- 15 ஆண்டுகளுக்குள் கட்சிக்குள் வந்தவர்கள்.
எனவே தமிழரசு கட்சியினுடைய அந்த கலாச்சாரம் பண்புகளில் இருந்து அவர்கள் பயிற்றப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் அண்மைக்காலத்தில் கட்சிக்குள் வந்தவர்கள். அது காரணமாக இருக்கலாம்.
அதாவது தமிழரசு கட்சியினுடைய இறுதித் தலைவர்களாக மாவை சேனாதி ராஜாவும் சம்பந்தனும் மாத்திரமே உள்ளார்கள். அதேபோல இப்போது பதவிக்கு போட்டி ஏற்பட்டிருப்பது அது உண்மையிலேயே கட்சிக்குள்ளே எந்த ஒரு கட்சிக்குள்ளும் ஜனநாயக அடிப்படையிலே மாறுபட்ட கருத்துக்கள் வருவதும் அல்லது சில வேளைகளில் பொருத்தமான பல பேர் இருக்கின்ற போது போட்டி வருவதும் இயற்கையானது. ஆனால் பெரும்பாலும் ஜனநாயக ரீதியாக கட்சிகளுக்குள்ளே பெருமளவிற்கு அது உட்கட்சி விடயமாக பேசி முடிக்கின்ற ஒரு மரபு இருக்கின்றது. அதேபோல வெளிநாடுகளிலும் இந்த நிலைமை காணப்படுகிறது.
எனவே அது ஒரு பெரிய விடயமல்ல. ஆனால் ஒரு கட்சி தலைமைக்கு தேர்தல் வைத்து அதனை தெரிவு செய்வது என்பது ஒரு புதிய விடயமாக காணப்படுகின்றது. தலைவர் போட்டி ஏற்பட்டது ஒரு விடயமல்ல. ஆனால் கட்சிக்குள் இரண்டு பிரிவாக இரண்டு அணிகளாக பிரிந்து விட்டார்கள். குறிப்பாக தலைவர் போட்டி மாத்திரமல்ல செயலாளர் தெரிவில் கூட பெரும் இழுபறி நிலை ஏற்பட்டு தற்பொழுது அந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இது ஒரு விசனத்திற்குரிய விடயமாகும்.
குறிப்பாக தமிழ் தேசிய போராட்டத்தில் இருக்கக்கூடிய தீயசக்திகளுக்கு ஒரு சந்தோஷமான ஒரு ஊக்குவிப்பான விடயமாக இருக்கும்.
எனினும் தமிழரசு கட்சியில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றது தமிழரசு கட்சி பழம் பெரும் கட்சி அதற்கு ஒரு ஆதரவுத்தளம் இருக்கின்றது அந்த தளத்தில் இருப்பவர்கள் மிகவும் விரக்தி அடைந்துள்ளார்கள்
அதேபோல தமிழ் தேசிய நகர்வுகளை முன் கொண்டு செல்வதற்கு ஒரு தடையாக இருக்கும் தற்போதுள்ள சூழ்நிலையில் சில முடிவுகளை எடுக்கக்கூடிய நிலையில் கட்சி இல்லை என்பது ஒரு கவலையான விடயம்
ஒரு கட்சி பலவீனப்படுகின்றபோது உட்கட்சி பிரச்சனை இருக்கின்ற போது கட்சிஉடையும் நிலை ஏற்படுகிறது அல்லது அதில் இருக்கக்கூடியவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய பொருத்தமான கட்சிகளுக்கு இணைவதும் பொது நலத்துடன் சார்ந்து செயற்பட விரும்புவர்கள் சில பேர் விலகி விடுவார்கள். சில பேர் கட்சியை விட்டு ஒதுங்கி விடுவார்கள். பல பேர் பொருத்தமான கட்சிகளுடன் இணைந்து தங்களுடைய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள்.
அந்த வகையிலே எதிர்காலத்தில் தற்போது தமிழரசு கட்சியில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படாமல் அதிகரித்துக் கொண்டு செல்லுமாக இருந்தால் ஏற்கனவே இருக்கக்கூடிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் கூட 35 தொடக்கம் 40 வருட கால வரலாற்றை கொண்ட கட்சிகள் எனவே தமிழரசு கட்சியில் இருந்து பலர் அதில் இணையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து இலங்கை தமிழ் அரசு கட்சி பிரிந்து சென்ற பின்னர், பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவில்லையென்ற விமர்சனங்கள் கிளம்பியது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் கணிசமானவர்கள், கட்சியின் செயற்றிறன் இன்மையால் அதிருப்தியடைந்து வெளியேறி விட்டனர். கூட்டணி ஆரம்பித்து பல மாதங்களாகி விட்ட போதும், உருப்படியாக ஒரு கிளையை கூட நிறுவ முடியவில்லை. இந்த பின்னணியில், தமிழ் அரசு கட்சியில் ஏற்பட்ட குழப்பம் தமக்கு சாதகமாக முடியலாமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நம்புவதையே சர்வேஸ்வரனின் அறிக்கை புலப்படுத்துகிறது.