24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

டயானா கமகேயின் பாராளுமன்ற அங்கத்துவத்துக்கு எதிரான உயர்நீதிமன்ற விசாரணை ஆரம்பம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (12) ஆரம்பமானது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்திருந்தார்.

இந்த மனு இன்று காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ​​பிரதிவாதி டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, மூன்று அடிப்படை ஆட்சேபனைகளை நீதிமன்றில் முன்வைத்தார்.

இந்த மனுவை சமர்ப்பிக்க மனுதாரருக்கு சட்டரீதியாக தகுதி இல்லை என்றும், மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு சரியானது என்றும், இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட விதம் உயர் நீதிமன்ற விதிகளுக்கு முரணானது என்றும் ஜனாதிபதி  சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ தனது ஆட்சேபனைகளில் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், இந்த ஆட்சேபனைகளை விசாரணையின் போது முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணிக்கு அறிவித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மனுவின் விசாரணையை ஆரம்பித்தது.

பிரித்தானிய பிரஜையான இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேர்தலில் போட்டியிட்டது மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் 90ஆவது சரத்தின் கீழ் இலங்கைக் குடியுரிமையை இழந்த திருமதி டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு அமர்ந்திருப்பது முற்றிலும் சட்டத்துக்கு எதிரானது. அமைச்சர் டயானா கமகே தனது பிரித்தானிய குடியுரிமையை மறைத்து இந்த நாட்டின் கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004-10-10 ஆம் ஆண்டு முதல் திருமதி டயானா கமகே சுற்றுலா மற்றும் வதிவிட விசாக்களை பெற்று அவ்வப்போது இலங்கைக்கு வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமதி டயானா கமகே இந்த நாட்டின் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றதாக ஒருபோதும் நீதிமன்றத்தின் முன் குறிப்பிடவில்லை. குடியுரிமைச் சட்டத்தின்படி இலங்கையர் ஒருவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவுடன் அவரது இலங்கைக் குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது.

அந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே இலங்கை பிரஜாவுரிமையை இழந்துள்ளார் என்பது தெளிவாகின்றது என சட்டத்தரணி தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் டயானா கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில், தான் பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தியதாகவும், இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெறவில்லை எனவும் ஒப்புக்கொண்டுள்ளதாக மேலதிக தகவல்களை வழங்கிய சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு தனது பிரித்தானிய குடியுரிமையை துறந்ததாக டயானா கமகே அந்த அறிக்கையில் தெரிவித்திருந்த போதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்றில் எந்த ஆதாரத்தையும் முன்வைக்க தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், டயானா கமகேவின் குடியுரிமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரியவந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும்பகந்தர சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ஃபர்மான் காசிம், நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்பின், மேலும் மனு விசாரணை நாளை (13)க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் எனவும், அவர் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தானே கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீது தீர்ப்பளித்த 3 நீதிபதிகள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மையான நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் டயானா கமகே பாராளுமன்றத்தில் அமர தகுதியற்றவர் எனவும் கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரவு இசை நிகழ்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மீதான ஆய்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Pagetamil

மதுபோதையில் வந்த பொலிசார் பாதசாரி கடவையில் மூதாட்டியை மோதித்தள்ளினர்!

Pagetamil

புதையல் தோண்ட முயன்ற 10 சந்தேக நபர்கள் கைது

east tamil

2வது நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

Pagetamil

Leave a Comment