தனது இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி அதனை காணொளியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தையொருவர் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் உள்ள தனது மனைவியின் வீட்டில் வசிக்கும் 33 வயதுடைய சந்தேகநபரான தந்தையே கடந்த 5ஆம் திகதி இரவு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
09 மற்றும் 05 வயதுடைய இரண்டு பிள்ளைகளை தாக்கிய சந்தேக நபரின் மனைவி, பணி பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு குழந்தைகளும் பாட்டியின் பராமரிப்பில் உள்ளதாகவும், சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள வாகனம் சுத்தம் செய்யும் நிலையத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளும் தந்தையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத காரணத்தினால் சந்தேகத்திற்குரிய தந்தையினால் தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இரண்டு பிள்ளைகளுடன் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் இரண்டு குழந்தைகளையும் பொறுப்பேற்று டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.