“மக்களவைத் தேர்தலில் தனித்து களம் போட்டியிடுவது அல்லது 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விரும்புகின்றனர்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. அதில் மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், தேமுதிக இந்த முறை தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். காரணம், கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் இது.
விஜயகாந்த்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் குற்ற உணர்வுடன் கண்ணீர் சிந்துவதை நான் பார்க்கிறேன். எனவே, விஜயகாந்தின் மரணத்துக்கு வந்தது ஏதோ அனுதாப அலை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இது அனுதாப வாக்குகளாக மாறும், இதை அனுதாபம் என்று நினைத்துவிடாதீர்கள். எனவே, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் தேமுதிகவைச் சேர்ந்த அனைத்து மாவட்டச் செயலாளர்களின் கருத்து.
ஒன்று அதிமுக கூட்டணி, மற்றொன்று திமுக கூட்டணி, பிறகு பாஜக கூட்டணி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது என மொத்தம் 4 வழிகள்தான். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கருத்து தனித்துப் போட்டியிடுவது. அல்லது, மீதமுள்ள 3 கூட்டணிகளில் யார் தேமுதிகவுக்கு அதிகமான இடங்களை, அதாவது 14 மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்களது இறுதி முடிவாக அறிவித்துள்ளனர்” என்று பிரேமலதா தெரிவித்தார்.
நடப்பது என்ன? – கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி விஜயகாந்த் மறைந்தார். தற்போது மக்களவைத் தேர்தல் பணிகளை தேமுதிகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி, தேமுதிக தலைமை நிர்வாகிகளிடம் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, போட்டியிட விரும்பும் மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் தேமுதிக தரப்பில் அதிமுக, பாஜகவுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரம், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திமுக தரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் தேமுதிக தலைமையைத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக பொதுச்செயலாளராக பிரேமலதா பொறுப்பேற்று தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய முதல் உரையில், “2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக எம்.பி.-க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முதலிலேயே எழுதித் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலைப்பாட்டில் தேமுதிக தலைமை உறுதியாக இருப்பதாகவும், தொண்டர்களின் விருப்பப்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவோருடன் கூட்டணி அமைப்பது என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் தற்போது பிரேமலதா கூட்டணிக்கான நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார்.