கைது செய்யப்பட்ட ஆவா கும்பல் ரௌடியான பிரபா என அழைக்கப்படும் பிரபாகரன் கௌசிகனை இன்று (5) மதியம் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர்.
அவரை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
யசோரபுர பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் பதுங்கியிருந்த ஆவா கும்பல் ரௌடியான பிரபாகரன் கௌசிகனை, வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
அவர் டுபாய்க்கு தப்பிச் செல்லும் நோக்கில் குறித்த வீட்டில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் மல்லாகம், நீலியம்பனை பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
அவர் ஆவா கும்பலில் குயின்சி தம்பா என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கிறார்கள். ஆவா ரௌடிகள் தமது குழுவை அடையாளப்படுத்த 001 என்ற குறியீட்டு எண்ணை பயன்படுத்துகிறார்கள். கௌசிகனும் அந்த குறியீட்டு அடையாளங்களை வைத்திருந்தார்.
சந்தேகநபரிடம் இருந்து 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அவரது வீட்டில் ஆவா கும்பலின் சின்னம் அடங்கிய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்து பல வாள்வெட்டு குற்றங்களை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
யாழ் குடாநாட்டில் இவர் செய்த குற்றங்கள் தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் 02 திறந்த பிடியாணைகளும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் 02 பிடியாணைகளும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் வேறொருவரின் கடவுச்சீட்டில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்துள்ளார்.
ஆவா குழுவுக்கு வினோத் என்ற ரௌடி தலைமை தாங்கிய போது, வினோத்தின் நண்பனான கௌசிகனும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டிருந்தார்.
ரௌடி கௌசிகன் தற்போது கல்கிசை பொலிசாரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.