26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

திருட்டு முழு நேர தொழில்… பிரமாண்டமான சொகுசு மாளிகை… சுற்றிவர சிசிரிவி கமரா: யாழில் சிக்கிய திருடனின் சொகுசு வாழ்க்கை!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பல திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருட்டை மாத்திரமே தொழிலாக கொண்ட இவர், அண்மையில் பெரிய வீடொன்று கட்டி, அதை சுற்றிலும் சிசிரிவி கமரா பொருத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது.

நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீடு புகுந்து நகை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவு உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த திருடன் கைவரிசை காட்டியுள்ளார். இவர் அதிகாலையில் திருடும் வாடிக்கையுள்ளவர்.

பாடசாலை, அலுவலகம் செல்பவர்கள் உள்ள வீடுகளில் அதிகாலையில் எழுந்து சமையல் செய்து தயாராகும் போது, வீட்டு கதவுகள் திறந்திருக்கும் போது, இரகசியமாக நுழைந்து திருடுவது இந்த திருடனின் வாடிக்கை.

நீதிமன்ற உத்தியோகத்தரின் வீட்டில் அதிகாலையில் நகை திருடப்பட்ட சம்பவத்தை விசாரித்த நெல்லியடி பொலிசார், அதிகாலையில் திருட்டு நிகழ்ந்ததால் மேற்படி திருடனின் கைவரிசையாக இருக்கலாம் என கருதி அவரை தேடிய போது, அவர் தலைமறைவாகி விட்டார்.

அவர் ஆனைக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரையே திருமணம் முடித்திருந்தார். அவரது உறவினர் ஒருவரின் வீட்டில் சிறிது காலம் தலைமறைவாகி விட்டார்.

பின்னர் மீண்டும் நெல்லியடிக்கு வந்து, வதிரி பகுதியிலுள்ள வீடொன்றில் அதிகாலையில் திருடுவதற்காக மதில் பாய்ந்து சென்ற போது, மதில் உடைந்து விழுந்து, திருடனின் கால் உடைந்தது. அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திருடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிந்த நெல்லியடி பொலிசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொலிசார் தன்னை இரகசியமாக நோட்டமிடுவதை அறிந்த திருடன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போதே இரகசியமாக அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பின்னர், கடந்த வருடம் மார்ச் மாதம் கையடக்க தொலைபேசி, நகை திருடிய இரண்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிசார் அவரை தேடிய போது, சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நடந்த விசாரணையில் அவருக்கு மேலும் பல திருட்டுக்களில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர், கடந்த 1ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், நீதிமன்ற உத்தியோகத்தரின் நகை திருடிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். திருடிய நகையை அடகு வைத்ததும் தெரிய வந்துள்ளது.

திருட்டை மட்டுமே தொழிலாக கொண்ட இந்த நபர், அல்வாய் பகுதியில் பிரமாண்டமாக வீடொன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டில் சிசிரிவி கமரா பொருத்தியுள்ளார்.

வீட்டின் பின்பக்கமாக தகர வேலியமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இடத்தில் தகரத்தை அகற்றி, மீள பொருத்தும் விதமாக நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது. பொலிசார் அங்கு வருவதை அறிந்தால், பின்பக்கமாக தப்பியோடவே இந்த ஏற்பாடு.

பொலிசார் அந்த நபரை தேடிச்சென்ற போது, பலமுறை இப்படி தப்பிச் சென்றுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
5
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

Leave a Comment