ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதற்கு முன்னர் முக்கிய விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு இடம் மாற்றப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி அனைத்துக் கட்சிக் கூட்டமாக மாற்றப்பட்டதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆரம்பத்தில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதியுடனான பிரத்தியேக கலந்துரையாடலாக அமையும் என்ற எண்ணத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், ஜனாதிபதி விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வழிமுறைகள் பற்றிய முன்னோக்குகளைத் திரட்டுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நிமல் லான்சா குழுவைச் சேர்ந்த சிலர் உட்பட ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் பிரசன்னமாகியிருந்த போது பதற்றம் ஏற்பட்டது.
எதிர்பாராமல் ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டமை குறித்து விரக்தியை வெளிப்படுத்திய காரியவசம், ஜனாதிபதித் தேர்தல் விடயங்கள் குறித்து திடீரென கலந்துரையாடுவதற்கு தமது கட்சி தயாராக இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எந்தவொரு தேர்தல் கலந்துரையாடலுக்கும் முன்னர் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, நேரமின்மை காரணமாக தனியான கூட்டங்களை நடத்த முடியாது என வாதிட்டார். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி போன்ற எதிர்க்கட்சிகளின் தீவிர ஈடுபாட்டை அவர் மேற்கோள் காட்டினார்.
இதற்கு பதிலளித்த காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளில் இருந்து வேறுபட்டு செயற்படுவதாகவும், ஜனாதிபதியுடன் தனியான சந்திப்பை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளரையும் ஆதரிப்பது குறித்து பெரமுன இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.