பிரபல மாடலும், நடிகையுமான பூனம் பாண்டே நேற்று முன்தினம் இரவு திடீரென காலமானார். அவர் கர்ப்பப்பை புற்று நோய் காரணமாக இறந்தார் என்று அவரது மேலாளர் நிகிதா சர்மா வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பூனம் பாண்டேயின் குடும்பத்தினர் இந்த மரணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது மொபைல் போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பூனம் பாண்டே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உதவியாளரும் தனிப்பட்ட பாதுகாவலருமான அமின் கான் தெரிவித்துள்ளார்.
அமின் கான் இது குறித்து அளித்த பேட்டியில், “பூனம் பாண்டே இறந்தார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரது சகோதரியை தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை. மீடியா மூலம் தான் பூனம் பாண்டே இறந்தார் என்று தெரிந்து கொண்டேன். ஜனவரி 31ஆம் திகதி கூட மும்பையில் உள்ள போனிக்ஸ் மாலில் போட்டோ ஷூட்டிற்கு அவருடன் நான் சென்று இருந்தேன். அவர் நன்றாகத்தான் இருந்தார். அவருக்கு எந்த வித உடல் கோளாறும் இருந்ததாக தெரியவில்லை. அவர் என்னிடமும் தனக்கு உடல் நலக்கோளாறு இருப்பதாக எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. உண்மை என்ன என்பதை அவரது சகோதரியிடமிருந்து தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அதோடு பூனம் பாண்டே சமீபத்தில் கூட கோவாவிற்கு சென்று வந்திருந்தார். அது தொடர்பான புகைப்படங்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதோடு இதற்கு முன்பும் அவருக்கு கர்ப்பபையில் புற்று நோய் இருந்ததாக செய்தி எதுவும் வெளியில் வந்ததில்லை. இதனால் அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. உடற்கூராய்வு முடிவுகள் வந்தால் தான் உண்மை தெரியும்!