24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

சுதந்திரதினத்தை கருப்பு தினமாக அனுட்டிக்க அழைப்பு!

பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திரதினத்தை தமிழர் தேசத்தின் கருப்பு தினமாக அனுட்டிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்-

பிரித்தானிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா, 04.02.1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்ற நாள் தமிழ்த் தேசிய இனம் திறந்தவெளி சிறையில் இடப்பட்ட நாள். ஒட்டுமொத்த நாட்டினுடைய இறைமை, ஆட்சியதிகாரம் அனைத்தும் தனித்தே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளிலே ஒப்படைக்கப்பட்டமை என்பது தமிழினம் மீதான தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, 2009 ஆண்டு இனப்படுகொலை எனும் கோரமுகமாய் வெளிப்பட்டதென்பதும் யாவரும் அறிந்ததொன்றே…

சிறிலங்காவின் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தே தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பென்பது சிங்கள குடியேற்றத்திட்டங்கள், இராணுவமயமாக்கம் முதற்கொண்டு தொடங்கிய இனவழிப்புச் செயன்முறை, 2009 ஆண்டு ஈழப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தை சூறையாடுவதில் மேலும் தீவிரநிலை கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் பெப்ரவரி 04, 2024 ஐ கறுப்புநாளாக பிரகடனப்படுத்தி, பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புதினப் பேரணியினை முன்னெடுக்க அழைப்பு விடுக்கின்றோம்.

1. வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தின் மீதான திட்டமிட்ட சிங்கள – பௌத்த குடியேற்றங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக தற்போது கையறு நிலையில் உள்ள கிழக்கு மாகாணம் மீதான ஆக்கிரமிப்புக்கள் தாமதமேதுமின்றி முடிவுக்கு கொண்டு வரப்படவும் வேண்டும்.

2. ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர் என்பதை ஏற்று ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

3. தமிழ் மக்களிற்கான அரசியற்தீர்வு தொடர்பான முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே முன்னெடுக்கப்பட வேண்டும். சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட பதின்மூன்றாம் திருத்தத்தினை முற்றாக நிராகரிக்கின்றோம்.

4. தமிழர் தாயகத்தில் முடிவற்றுத் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவப் பிரசன்னம், சிங்கள – பௌத்தமயமாக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை போன்றவற்றிற்கான உரிய தீர்வுகள் தாமதமேதுமின்றி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிப்புக்களை முன்னின்று நடாத்தும் அரச இயந்திரத்தையும் அதன் நிறுவனங்களையும் கண்டிக்கின்றோம்.

தமிழர் தேசத்தின் மீது நூற்றாண்டு கடந்தும் சூழ்ந்துள்ள பேரினவாதத்தீயிலிருந்து தமிழர் தாயகத்தை காத்திடவும், தலைமுறைகள் தாண்டிய இனத்தின் இருப்பிற்காகவும் எதிர்வரும் பெப்ரவரி 4, 2024 ஆம் நாள் கிளிநொச்சி இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்திவரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள உணர்வுடனும் உரிமையுடனும் அழைத்து நிற்கின்றோம்- என குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரவு இசை நிகழ்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மீதான ஆய்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Pagetamil

மதுபோதையில் வந்த பொலிசார் பாதசாரி கடவையில் மூதாட்டியை மோதித்தள்ளினர்!

Pagetamil

புதையல் தோண்ட முயன்ற 10 சந்தேக நபர்கள் கைது

east tamil

2வது நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

Pagetamil

Leave a Comment