பெலியத்தவில் கடந்த வாரம் (22) பட்டப்பகலில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை (29) காலை ஹக்மன பொலிஸாரின் பொலிஸ் குழுவினால் இரண்டு பெண்களும் ரத்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 23 மற்றும் 33 வயதுடைய காலி, பூஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் பெண் ஒருவர் கராப்பிட்டியவில் இருந்து பூஸ்ஸ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பெலியத்தவில் அண்மையில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பில் ஆழமான விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேடமாக நியமிக்கப்பட்ட ஆறு பொலிஸ் குழுக்களினால் இதுவரை ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல பக்ஷய கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்காவது நபரான 30 வயதுடைய நபர் ஒருவர் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்டார். காலி, ரத்கமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, வியாழக்கிழமை (25) பாரிய துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களிடம் இருந்து 9 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின், கத்தி, மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை STF அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 25 மற்றும் 35 வயதுடைய இருவரும் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
டுபாயில் வாழ்ந்து வரும் முக்கிய பாதாள உலகத் தலைவர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் பெலியத்த பல கொலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றுவதற்கு முன்னின்று செயற்பட்ட பிரதான சந்தேக நபரான சமன் குமார, கொலையாளிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய பஜிரோவின் சாரதியும் ஆவார். அக்குரஸ்ஸ, பங்கமவில் புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டார்.