பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செவ்வாய்க்கிழமை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் கீழ் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கும் இதே தண்டனை விதிக்கப்பட்டது.
“முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பிடிஐ துணைத் தலைவர் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் AFP இடம் தெரிவித்தார்.
அரசு ஊடகங்களும் தண்டனைகளை அறிவித்தன.
அரசு ஆவணங்களை கசியவிட்டதாக இருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இம்ரான் கான் 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தார் – நாட்டின் இராணுவ கிங்மேக்கர்களின் ஆதரவை இழந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் வெளியேற்றப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய இம்ரான் கான், பாகிஸ்தான் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், அரச தலைவர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டார், அவர்கள் அமெரிக்க ஆதரவு சதியில் அவரை வெளியேற்றியதாகவும், அவரை காயப்படுத்திய ஒரு படுகொலை முயற்சிக்கும் சதி செய்ததாகவும் குற்றம் சாட்டினர்.
கடந்த மே மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக அவரது கட்சி பெரும் போராட்டங்களை முன்னெடுத்த போது, அவரது பிடிஐ மீது கடுமையான ஒடுக்குமுறை கட்டவிழ்த்த விடப்பட்டது. இதனால் கட்சியின் பல மூத்த தலைவர்கள் விலகி அல்லது மறைந்துவிட்டனர்.
“இது நீதியின் கொலை” என்று மனித உரிமை ஆர்வலரும் அரசியல் ஆய்வாளருமான தௌசீப் அகமது கான் கூறினார்.
“ஆனால், இந்த அநீதியின் காரணமாக அவரது அனுதாபிகள் அதிகரிப்பதால், மக்களிடையே அவரது புகழ் அபரிமிதமாக வளரும்.”
பி.டி.ஐ., தேர்தல்களுக்கு முன்னதாக பொது வெளியில் இருந்து பெருமளவில் விலகியிருக்கிறது.
கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தனி நபர்களாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை இம்ரான் கான் எடுத்ததால், அமெரிக்க பின்னணியில் இம்ரானுக்கு எதிரான சதிகள் அரங்கேற்றப்படுவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.