இந்தியாவிலுள்ள தனது சகோதரியைப் பார்க்கச் சென்ற போது உயிரிழந்த தனது தந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியது, அவரது உடலை தோண்டியெடுத்து மீளவும் பிரேத பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமென பெண்ணொருவர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவரது சடலத்தை தோண்டி எடுத்து, பிரேம பரிசோதனை மேற்கொள்ளுமாறு ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவரது வாடிக்கையாளரின் தந்தை இயற்கையான காரணங்களால் இறந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஆனால் தந்தையின் உடலில் உள்ள காயங்களும், இந்திய மருத்துவ அறிக்கைகளும் முரண்பாடானவை என்று சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டார்.
இதன் மூலம் மைக்கேல் டேனியல் ஜெயராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.
சட்டத்தரணி அஸ்விதா ரவீன் பெனடிக் மூலம் மனுவை முன்வைத்த வத்தளை, கல்யாணி மாவத்தையைச் சேர்ந்த திருமதி ஜெயராஜ் ரூத் கிறிஸ்டினா, செப்டம்பர் 20, 2023 அன்று, தன்னுடன் வாழ்ந்த தனது தந்தை, இந்தியாவின் சென்னையில் வசிக்கும் தனது சகோதரி மைக்கேல் விக்டோரியாவைப் பார்க்கச் சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 30, 2023 அன்று, சகோதரியின் கணவர் அனுப்பிய ‘வாட்ஸ்அப்’ செய்தியில், தந்தை நடைபயிற்சிக்காக சென்ற போது விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று தெரிவிக்க மீண்டும் ஒரு செய்தியை அனுப்பினார்.
பின்னர் 1 1/2 இலட்சம் இந்திய ரூபா செலுத்தி தந்தையின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சடலத்தின் நெற்றி, தோள் மற்றும் கைகளில் காயங்கள் காணப்பட்டன.
இந்த நிலையில், வெலிசறை நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் சட்டத்தரணி ஏஞ்சலோ பெனடிக் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியமளித்த ஜெயராஜ் ரூத் கிறிஸ்டினா, தனது தந்தையின் மரணம் தொடர்பில் இந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது ஒரு ‘மாரடைப்பு’ மற்றும் ‘இயற்கை காரணங்களால்’ ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையின் மரணம் தொடர்பில் இந்திய அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்யவில்லை எனவும், தந்தையின் சடலத்தில் உள்ள காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த ரூத் கிறிஸ்டினா, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட தந்தையின் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.