மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரியும் யுவதி ஒருவரின் வங்கி அட்டையை திருடி பதின்மூன்று இலட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபா பணத்தை திருடிய நபர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அதே மசாஜ் நிலையத்தின் காசாளர் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் நேற்று முன்தினம் (21) கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அவரது பையில் இருந்த வங்கி அட்டை திருடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையில் 15 தடவைகள் சம்பந்தப்பட்ட வங்கி அட்டையில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு கமெரா காட்சிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மசாஜ் நிலையத்தின் காசாளராக பணிபுரியும் நபரே இதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.