தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பரிமாற்ற பகுதிக்கு அருகில் சிவில் விமான சேவை உத்தியோகத்தரான பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கஹதுடுவ பொலிஸார் சந்தேக நபரை நேற்று (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கொலை வழக்கு தொடர்பாக சந்தேக நபரை 24 மணிநேரம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிவில் விமானசேவை உத்தியோகத்தரான பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கொலையாளி தனது வாக்குமூலத்தில் கூறியது: “நான் அவளுக்கு போன் செய்தாலும் அவள் அதற்க பதிலளிக்காததால் எனக்கு கோபம் வந்தது. அதனால் அவள் வேலை முடிந்து கஹதுடுவ நெடுஞ்சாலைக்கு வரும்போது அவளைக் கொல்லப் போவதாகச் சொல்லிவிட்டு அவள் என்னைத் தவிர்த்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக வீதியைக் கடந்தபோது அவளைக் கத்தியால் குத்தினேன்.
நான் அவளுடன் 1996 இல் டேட்டிங் செய்ய ஆரம்பித்தேன், நான் அவளை மிகவும் நேசித்தேன். இருப்பினும், எனக்கு 2000 இல் திருமணம் நடந்தது. எனக்குப் பிறகு அவள் ஒரு டொக்டரை மணந்தாள். பிறகு நீண்ட நாட்கள் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்தேன். எங்களுக்கு இடையேயான உறவில் எந்த இரகசியமும் இல்லை. எங்களுக்குள் அவ்வப்போது பல சந்தர்ப்பங்களில் சண்டைகள் வந்தாலும் அவைகள் ஒவ்வொரு முறையும் சமாதானமாகவே முடிந்தது. நான் அவளை வேலை முடிந்ததும் கஹதுடுவ நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்து எண்ணற்ற சந்தர்ப்பங்களில் எனது காரில் அழைத்து வந்து அவள் வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டேன்.
அனுருத்திகா என்னைத் தவிர்த்துவிட்டு வீதியின் மறுபுறம் சென்றபோது, எனக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை, நான் ஆத்திரத்தில் அவளைக் கத்தியால் குத்தினேன். அதன்பிறகு நான் இங்கு தங்கினால் பிரச்சனைகள் வரும் என்று எண்ணி வீடு திரும்பும் போது, அடிக்கடி வெளியூர் சென்று வருவதால், பயணச்சீட்டுக்கு உதவும் நண்பர் மூலம் டுபாய்க்கு விமான டிக்கெட் வாங்கினேன்.
காரை வீட்டில் வைத்துவிட்டு முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றதாகவும், அங்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக தான் ஆழமாக நேசித்த அனுருத்திகாவுக்கு செய்த செயலுக்கு வாழ்நாள் முழுவதும் வருந்துவேன் என்றார்.