முல்லைத்தீவில் இளம் பெண்ணொருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன், கிராமத்தில் பல இளைஞர்கள் தொடர்பில் இருந்ததாகவும், அப்படி தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணி என்னவென்று நாம் ஆராய்ந்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமமொன்றில் பிரிவில் வசிக்கும் சுமார் 30 வயதான இளம் பெண்ணொருவரே எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பெண் கிராமத்தில் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றும், இதனால் கிராமத்தில் உள்ள ஆண்கள் தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டுமென சமூக வலைத்தள பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி கிராமத்தின் பிரமுகர் ஒருவர் தமிழ் பக்கத்துடன் பேசிய போது, “எமது கிராமத்தை சேர்ந்த அந்த பெண் முதலில் ஒரு திருமணம் செய்தார். அந்த திருமணத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்துள்ளது. தற்போது கணவரை பிரிந்து அந்த பெண் வாழ்கிறார். குழந்தையும் அவருடனே வளர்கிறது. அவர் பல ஆண்களுடன் தவறான உறவில் உள்ளார் என ஊருக்குள் சில காலமாக அரசல்புரசலாக பேச்சிருந்தது. அந்த தனிப்பட்ட விவகாரங்களில் நாம் தலையிடவில்லை.
ஆனால் இப்பொழுது அந்த பெண்ணுக்கு எயிட்ஸ் தொற்று என பரவலாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். இதற்கு பின்னரே, ஊரில் உள்ளவர்களில் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்று ஆராய்ந்தால், அது பெரிய பட்டியலாக நீள்கிறது. இதுவரை நாம் கணக்கெடுத்ததில், எமது ஊரில் மட்டும் 35 பேர் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்கிறார்கள். அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என பட்டியலிடுவதற்காக ஒரு வெற்றுத்தாளில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை குறித்தோம்.
அதையும் யாரோ புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு விட்டனர். இதெல்லாம் பிழையான விடயங்கள்“ என்றார்.
பழி வாங்கிய காதலன்
இந்த பெண்ணின் புகைப்படங்கள், எயிட்ஸ் தகவல் பரவியதன் பின்னணியில் அவரது தற்போதைய வெளிநாட்டு காதலன் ஒருவரும் உள்ளார் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள்.
இதுபற்றி தமிழ்பக்கத்துடன் பேசிய கிராமத்து இளைஞன் ஒருவர்-
“அந்த பெண்ணுக்கு தவறான உறவுகளும், பல காதல்களும் இருந்துள்ளது. பேஸ்புக் மூலம் அறிமுகமான பிரான்ஸில் வசிக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். அந்த பெண்ணுக்காக, அந்த இளைஞன் பெருந்தொகை பணத்தை செலவிட்டார். பிரான்ஸிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தாலும், அந்தப் பெண்ணின் வீட்டிலேயே தங்கியிருந்தார். சட்டப்படி திருமணம் செய்யாவிட்டாலும், இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தனர். அது ஊருக்கு தெரிந்த இரகசியம்.
அந்த காதலனுடன் தொடர்பில் இருந்த காலத்திலேயே, வேறு நபர்களுடனும் அவர் காதல் தொடர்பில் இருந்தார். இதை பிரான்ஸ் காதலன் அறிந்ததை தொடர்ந்தே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன“ என்றார்.
அவர் மேலும் கூறுகையில்-
“அந்த பெண்ணின் காதல் கதைகளை அறிந்ததும், தனக்கு துரோகம் செய்து விட்டார் என பிரான்ஸ் காதலன் கோபப்பட்டுள்ளார். இதெல்லாம் அந்த காதலனே எமக்கு சொன்ன தகவல்கள். அவர் சொன்ன தகவல்படி- ஒருநாள் காதலி வீட்டில் தங்கியிருந்த போது, தனது பணப்பையை காணவில்லையென அறைக்குள் தேடியுள்ளார். கட்டில் மெத்தையை தூக்கிப் பார்த்த போது, அதன் கீழ் ஒரு மருத்துவ அறிக்கை ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுள்ளார். எடுத்து பார்த்தால், காதலிக்கு எச்.ஐ.வி பொலிட்டிவ் என குறிப்பிடப்பட்ட மருத்துவ அறிக்கை. அதை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார். நேராக பிரான்ஸ்க்கு சென்று விட்டதாக எமக்கு சொன்னார். அந்த பெண்ணுக்கு எயிட்ஸ் தொற்று இருக்கிறதா என்பதெல்லாம் எமக்கு தெரியாது. இதெல்லாம், அந்த பிரான்ஸ் காதலன் வெளியிட்ட, பரப்பிய தகவல்கள். அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கையென பகிரப்பட்டவையெல்லாம் உண்மையான ஆவணங்களா என்பதும் எமக்கு தெரியாது“ என்றார்.
தவறான வழிமுறை
குறிப்பிடப்பட்ட பெண் எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அதை பகிரங்கமாக- சமூக ஊடகங்களில் பகிர யாருக்கும் அனுமதியில்லை. அது தண்டனைக்குரிய குற்றம்.
நோயாளியின் அடையாளத்தை வெளிப்படுத்தாமலிருக்கும் உரிமை அவருக்குள்ளது. அதனால்தான் மருத்துவமனைகளிலும் பாலியல் நோயாளிகள் உள்ளிட்டவர்களின் அடையாளங்களை பாதுகாப்பதில் அதிகபட்ச அக்கறை காண்பிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பெண் தனது எச்ஐவி தொற்றை மறைத்து வாழ்ந்து வருகிறார், பலருடன் உறவில் இருந்தார் என்ற எச்சரிக்கைகள் தேவையற்றவை.
அந்தப் பெண் எச்ஐவி தொற்றுக்குள்ளானாரா இல்லையா என்பதை இப்படியான பேஸ்புக் விசாரணைகள் ஊடாக உறுதி செய்ய முடியாது. பகிரப்பட்ட ஆவணம் உண்மையானதா பொய்யானதா என்பதும் தெரியாது. ஒருவேளை உண்மையாக இருந்தாலும் கூட. அவர் தனது நோய்க்கு சிகிச்சை பெறக்கூடும். அதையும் நாம் யாரும் உறுதி செய்ய முடியாது.
குற்றமற்றவன் யாராவது அந்தப் பெண் மீது முதல் கல்லை எறியட்டும் என இயேசு கிறிஸ்து சொன்னார். ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்ளும் ஆண்களை குறிப்பிடாமல், அந்த பெண்ணின் படங்களை மட்டும் சமூக ஊடகத்தில் பகிர்ந்து எச்சரிக்கை பதிவிடுவது அயோக்கியத்தனமல்லவா!