“விஜயகாந்த் போன்ற மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியைப் பார்ப்பது அரிது. கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியை கேட்ட பிரதமர் மோடி, மத்திய அரசின் சார்பில் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். கேப்டனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதலை தந்தார்.” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை தீவுத் திடலில் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நிர்மலா சீதாராமன் பேசியவதாவது: “கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியை கேட்ட பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி மத்திய அரசின் சார்பில் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்.
கேப்டனின் தொண்டர்களை சந்திக்க வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதலை தந்தார். அதனால் உடனே கிளம்பி வந்து மனதுக்கு வேதனையளிக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறேன்.
மக்களுக்கான விஜயகாந்த் பாடுபட்டது, பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பியது போன்ற விஷயங்களை நாம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவரது மனம் மிகவும் இளகிய மனம். பிறரது கஷ்டத்தை பார்க்க முடியாத மனம்.
தனக்கு கிடைப்பதே பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்தவர். உயர்ந்த நிலையில் இருப்பவர்க்கு ஒருவிதமான சாப்பாடு, வேலை செய்பவர்களுக்கு ஒருவிதமான சாப்பாடு என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் மனிதர்கள்தான் என்ற மனிதநேயத்துடன் செயல்பட்ட அரசியல்வாதி.
அரசியல்வாதிகளில் இதுபோன்ற குணம் கொண்டவர்களை பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட குணம் கொண்ட விஜயகாந்த் இன்று நம்மிடையே இல்லை. அந்த துக்கத்தை வெளிப்படுத்தவும் வார்த்தைகள் இல்லை.
இந்த நேரத்தில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் அவரது தொண்டர்கள் இங்கே காத்திருக்கின்றனர். அவர்களுடன் என் துக்கத்தை பகிர்ந்துகொள்ளவே பிரதமர் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்” இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.