மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை இறுதி ஊர்வலம் நடக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
நேற்று விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக இன்று விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டனர்.
இதனிடையே, விஜயகாந்தின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 50 கிலோ எடை கொண்ட பிரத்யேக சந்தனப் பேழை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், அதேபோல் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் சந்தனப் பேழையின் மற்றொரு பக்கத்தில் ‘கேப்டன்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சென்னை தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் சென்னை தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை இறுதி ஊர்வலம் நடக்கிறது.