தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார்.
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.