இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல் செயற்குழு கூட்டத்தை எதிர்வரும் 10ஆம் திகதி இரா.சம்பந்தனின் வீட்டில் நடத்தி, கட்சியின் தேசிய மாநாட்டு சர்ச்சைக்கு தீர்வு காண்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று (28) மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மாவை. சேனாதிராசா தலைமையிவ் இன்று இந்த சந்திப்பு நடந்தது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கட்சியின வட்டார, தொகுதிக்கிளைகளிற்கான தெரிவில் கனடா பணம் தாராளமாக விளையாடி, முறையற்ற விதமாக நியமனங்கள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்தும், இரா.சம்பந்தனை தவிர்த்து குகதாசன் என்ற கனடா இறக்குமதியை முன்னிறுத்த எம்.ஏ.சுமந்திரன் தரப்பு முற்படுவதையடுத்தும் கட்சியின் தேசிய மாநாட்டு விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
திருகோணமலை கிளைகளை மீள புனரமைக்காமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாமென இரா.சம்பந்தன் நேற்று முன்தினமும் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை ஆராய இன்று கட்சியின் முக்கிய தலைவர்கள் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் கூடினர்.
இதன்போது, ஜனவரி 10ஆம் திகதி கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தை கூட்டி, இந்த சிக்கல் தொடர்பில் ஆராய்வதென்றும், மாநாடு தொடர்பில் இறுதியான தீர்மானத்தை அங்கு எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.