முன்விரோதம் காரணமாக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த துணை நடிகைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி, அங்குள்ள கோயில் முன்பாக பூ வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது மகள் ராணியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான வீட்டில்திரைப்பட துணை நடிகையான ஜமுனாராணி என்பவர் வாடகைக்கு குடியிருந்துவந்தார். ஜமுனா ராணியின் வீட்டுக்குஆண்கள் பலர் வந்து சென்றதால் அவரை காலி செய்யும்படி கிருஷ்ணவேணியும், அவரது மகளும் கூறியுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின், 2 மாதமாக வாடகை தராததால் ஜமுனாராணி முன்பணமாக கொடுத்த ரூ.10 ஆயிரத்தில் ரூ.3 ஆயிரம் வாடகை பாக்கியை கழித்துக்கொண்டு ரூ.7 ஆயிரத்தை ராணி திருப்பிக் கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்டு வீட்டை காலி செய்த ஜமுனா, முன்பணமாக ரூ.85 ஆயிரம்கொடுத்ததாகவும், அதை ராணி திருப்பிதரவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் உண்மை நிலையை அறிந்து அந்தப் புகாரை முடித்து வைத்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 2016 ஜூலை 1-ம் தேதி, கோயில்முன்பாக பூ வியாபாரம் செய்துகொண்டிருந்த கிருஷ்ணவேணி மீது எண்ணெய்யுடன் இருந்த எரியும் அகல் விளக்கை ஜமுனாராணி வீசியுள்ளார். இதில் கிருஷ்ணவேணி சேலையில் தீப்பற்றி பலத்த காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த வடபழனி போலீஸார், ஜமுனா ராணியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு ஜமுனா ராணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜமுனா ராணி மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கியஅமர்வு, ‘‘ஜமுனா ராணி மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சந்தேகத்துக்குஇடமின்றி சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜமுனா ராணிக்கு மகளிர் நீதிமன்றம் விதித்துள்ள ஆயுள் தண்டனையை நாங்களும் உறுதி செய்கிறோம்’’ என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.