அண்மையில் உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்களால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி டிசம்பர் 23ம் திகதி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த மாணவி காய்ச்சல் காரணமாக வீடு சென்றார். அவருக்கு டெங்கு தொற்று உறுதியானதையடுத்து கடந்த 17ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து வாந்தியெடுத்ததால், அதை கட்டுப்படுத்த ஊசி மருந்தொன்று செலுத்தப்பட்டது. அந்த மருந்து செலுத்தப்பட்டதும் மாணவியின் உடலில் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டது. மாணவி வலியால் துடித்தார்.
அவர் உடனடியாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
22ஆம் திகதி மயக்கமுற்ற நிலையிலேயே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
23ஆம் திகதி இரவு 11 மணியளவில் அவர் உயிரிழந்தார். ஊசி மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் இருதயம் செயலிழந்து மரணம் சம்பவித்திருக்கலாமென நம்பப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக சடலத்தின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவிக்கு செலுத்தப்பட்ட ஊசியின் தரமும் பரிசோதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய கடனுதவியில் இலங்கைக்கு வந்த ஊசிகளின் தரம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மாணவியின் மரணமும் நிகழ்ந்துள்ளது. மாணவிக்கு செலுத்தப்பட்ட ஊசியினால் ஒவவாமை ஏற்பட்டதாக இலங்கை மருத்துவத்துறை பதிவுகளில் எந்த தகவலும் இல்லையென இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய ஒரு மருத்துவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியை நேற்று(25) இடம்பெற்ற நிலையில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.