வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன், பொலிசாரால் தாக்கப்பட்ட பின்னர் சிறுநீரில் இரத்தம் வெளியேறியதாக பிரதான சாட்சியான இளைஞன் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் தமிழ்பக்கத்துடன் பேசிய போது இதனை தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி சித்தங்கேணியை சேர்ந்த 2 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல், பொலிசாரால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 19ஆம் திகதி நாகராசா அலெக்ஸ் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிரிழந்திருந்தார்.
இதை தொடர்ந்து, அவர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளான அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அவர்களை தாக்கிய வட்டுக்கோட்டை நிலையத்தின் 4 பொலிசார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு 8ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சந்தேகநபர்களான பொலிசாரை, உயிர்தப்பிய சாட்சியான இளைஞன் அடையாளம் காட்டினார்.
வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளான சம்பவத்தை அந்த இளைஞன் தமிழ்பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவிக்கையில், கடந்த 8ஆம் திகதி நாங்கள் சிலர் பேசிக் கொண்டிருந்த போது, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நீலநிற முச்சக்கர வண்டியில் பொலிசார் வந்தனர்.
அலெக்சை கூப்பிட்டு, மரக்கடத்தல் வழக்கொன்று தொடர்பில் விசாரிக்க வேண்டுமென்றும், தம்முடன் வருமாறும் கூறினர். தனக்கு அப்படியான வழக்குகளில் தொடர்பில்லையென அலெக்ஸ் கூறி, பொலிசாருடன் செல்ல மறுத்தார். எனினும், பொலிசார் விடாப்பிடியாக நின்றனர். இந்த சமயத்தில் அலெக்ஸின் கைத்தொலைபேசியில் பணம் இல்லாததால், தனது உறவினர் ஒருவருக்கு பிளீஸ் கொல் மீ என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தனது உறவினருடன் பொலிஸ் நிலையம் வருவதாக அவர் கூறிய போதும், பொலிசார் ஏற்கவில்லை.
அருகிலிருந்த இன்னொருவரை, அலெக்ஸூடன் பொலிஸ் நிலையம் வருமாறு கேட்டனர். அவர் மறுத்து விட்டார். பின்னர் எங்கள் பக்கம் திரும்பி, ஏன் இருக்கிறீர்கள் என்றனர். கதைத்துக் கொண்டிருப்பதாக கூறினோம். என்னை பொலிஸ் நிலையம் வருமாறு கூறினர். நான் மறுத்த போதும், விசாரித்து விட்டு சிறிது நேரத்தில் விடுவதாக கூறி அழைத்துச் சென்றனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு பக்கத்தில் உள்ள கட்டிடத்துக்குள் எம்மை அழைத்து சென்றனர். என்னை முன்பகுதியில் உட்காரச் சொல்லிவிட்டு, அலெக்ஸை உள்ளே அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அலெக்சின் அலறல் சத்தம் கேட்டது. அவரை அடிக்கும் சத்தமும் கேட்டது.
எனது தொலைபேசியை வாங்கி அதை பரிசோதனை செய்தார்கள்.
கிட்டத்தட்ட ஒன்றரை, இரண்டு மணித்தியாலங்கள் அலெக்ஸை அடிக்கும், அலறல் சத்தங்கள் கேட்டபடியிருந்தன.
பின்னர் என்னையும் உள்ளே அழைத்து சென்றனர். அங்கிருந்து பக்கத்திலுள்ள அறையை எட்டிப்பார்க்குமாறும், அலெக்ஸை கட்டித்தொங்கவிட்டு அடிப்பதாகவும், என்னையும் அதேவிதமாக அடிக்கப் போவதாகவும் கூறினர்.
பக்கத்து அறையை எட்டிப்பார்த்தேன். அலெக்ஸின் கைகள் இரண்டும் பின்பக்கமாக கட்டப்பட்டு, கைகளில் நைலோன் கயிற்றினால் கட்டி மேலே தொங்கவிடப்பட்டிருந்தார். அவரது தலை கீழே தொங்கியபடியிருந்தது. (இந்த விதமாக நீண்டநேரம் கட்டித்தொங்கவிட்டு சித்திரவதை செய்ததால், அலெக்ஸின் தோள்மூட்டுக்கள் செயலிழந்திருந்ததாக உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது).
நான் எட்டிப்பார்த்த போது, ஒரு பொலிஸ்காரர் என்னை இடுப்பில் எட்டி உதைந்தார். நான் கீழே விழுந்தேன். என்னை கடுமையாக தாக்கினார்கள். என் கைகளையும் கட்டி மேலே தொங்கவிட முயற்சித்தனர். என் கையை கட்ட விடாமல் தடுத்ததுடன், பெரிதாக அலறி கூச்சலிட்டேன்.
ஒரு பொலிஸ்காரர் இரும்பு கம்பினால் எனது இடுப்பில் அடித்தார். என்னை குப்புற படுக்க வைத்து, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடக்கி, அதன் மேல் தடிமனான பொலிஸ்காரர் ஒருவர் ஏறி உட்கார்ந்தார். என்னால் வலி தாங்க முடியாமல் அலறினேன்.
பின்னர் மஞ்சள் பொலித்தீன் கை ஒன்றை தந்து மணக்குமாறு சொன்னார்கள். மணந்தேன். என்ன மணக்கிறது என கேட்டனர். ஒன்றுமில்லையென்றேன். பொலித்தீன் பைக்குள் நன்றாக முகத்தை நுழைந்து மணக்குமாறு சொன்னார்கள். மணந்தேன். பெற்றோல் மணக்கிறது என்றேன். அந்த பொலித்தீனால் எமது தலை, முகத்தை மூடிக்கட்டி விட்டு, அடித்தார்கள்.
நீண்ட நேரம் அடித்த பின், நள்ளிரவுக்கு அண்மையாக ஓய்ந்தார்கள். இதற்குள் அலெக்ஸை கட்டிலிருந்து இறக்கி, எங்கோ அழைத்து சென்றனர்.
நள்ளிரவுக்கு அண்மையாக நான் சிறுநீர் கழிக்க வேண்டுமென கேட்க, அங்கிருந்த மலசலகூடத்துக்கு அழைத்து சென்றார்கள். அங்கு வாசலுக்கு அண்மையாக சுவருடன் சாய்ந்தபடி அலெக்ஸ் உட்கார்ந்திருந்தார். கைகள் இரண்டையும், நீட்டிய கால்களில் வைத்திருந்தார். தலை குனிந்திருந்தது. “என்னால ஏலாமல் இருக்குது“ என திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னர், அங்கிருந்த கூண்டில் இருவரையும் ஒன்றாக தடுத்து வைத்தனர்.
அலெக்ஸ் கைகளை தூக்க, அசைக்க முடியாமல் இருந்தார். அப்படியிருந்தும், அடுத்த சில நாட்கள் எங்கள் இருவரையும் இரவில் கைகள் அல்லது கால்களை ஒன்றக பிணைத்து விட்டிருந்தனர்.
9ஆம் திகதி அலெக்ஸ் சிறுநீர் கழிக்க வேண்டுமென்றார். அவரை அழைத்து சென்றேன். அவரால் கைகளை அசைக்க முடியாது. அதனால் நான்தான் அவருக்கு உதவினேன். என்னை சற்று தள்ளி நிற்க சொன்னார். சிறிது நேரத்தில் சிறுநீர் கழித்து விட்டு வந்தவர், சிறுநீரில் இரத்தம் வெளியேறுவதாக சொன்னார்.
அடுத்த சில நாட்கள் எம்மை அந்த பகுதிலேயே தடுத்து வைத்திருந்தனர். வேறெந்த விசாரணையும் நடக்கவில்லை.
எமது கைரேகைகளை பதிவு செய்தனர்.
எம்மை தடுத்து வைத்திருந்த பகுதிக்கு பின் வாசல் வழியாக முச்சக்கர வண்டியை கொண்டு வந்து, எம்மை ஏற்றிச் சென்றார்கள். அங்கு சித்திரவதை நடந்த தகவலை சொல்லக்கூடாது என்றும், அலெக்சை கதிரையில் உட்கார வைத்து, கைகளை பின்பக்கமாக 2,3 மணித்தியாலங்கள் கட்டிவைத்திருந்ததாகவும், கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு தப்பியோட முற்பட்ட போது கைகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மட்டுமே சொல்ல வேண்டுமென்றும் பொலிசார் சொன்னார்கள். மீறி உண்மையை சென்னால், வேறு வழக்கில் உள்ளே தள்ளிவிடுவோம் என்றனர். எம்மை அராலியிலுள்ள ஆயுர்வேத வைத்தியர் ஒருவரிடம் அழைத்து சென்றனர்.
அலெக்ஸ்க்கு என்ன நடந்தது என கேட்டார். அலெக்ஸால் பேச முடியவில்லை. என்னை அழைத்த போது, பொலிசார் சொன்னதை போல சொன்னேன். அலெக்ஸின் கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் கூறினார். அத்துடன், கையில் பூச எண்ணெயும் தந்தார்.
மீண்டும் பொலிஸ் நிலையத்தின் பக்கத்து கட்டிடத்துக்கு அழைத்து வரப்பட்டோம். அலெக்ஸின் கைகளுக்கு நானே எண்ணெய் பூசி விட்டேன்.
பின்னர் எம்மை வாக்குமூலம் பதிவு செய்ய அழைத்தனர். பெயர், பிறந்த திகதி, படித்த பாடசாலை உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் கேட்டு பதிந்தனர். அந்த ஆவணத்தில் கையெழுத்திடுமாறு சொன்னார்கள். அதை படிக்காமல் கையெழுத்திட மாட்டேன் என்றேன். உன்னை விட்டு விடுவோம். ஒரு பிரச்சினையும் இல்லை. கையெழுத்திடு என்றார்கள். கையெழுத்திட்டேன்.
அலெக்சிடமும் அதுபோல விபரங்களை கேட்டு பதிந்து விட்டு கையெழுத்திட சொன்னார்கள். அலெக்ஸால் கையெழுத்திட முடியாது. அவரது விரவில் மைபூசி விரலை பிடித்து தூக்கி கைநாட்டு வைத்தார்கள்.
அலெக்ஸ் அசைய மாட்டாமல் இருக்கும் போதும், அவர் ஓடிவிடுவார் என இரவில் எங்கள் இருவரையும் கால் அல்லது கையில் விலங்கால் பிணைத்து விடுவார்கள். அலெக்ஸின் கை அசைய முடியாததால், அவரது உடம்பிலேயே எனது கையையும் வைத்து விடுவேன்.
12ஆம் திகதி எம்மை நீதிபதியிடம் அழைத்து செல்வதாக கூறினார்கள். அங்கும் நடந்ததை கூறக்கூடாது என்றும், ஏற்கெனவே ஆயுர்வேத வைத்தியரிடம் கூறியதையே திரும்ப கூற வேண்டுமென்றார்கள். எம்மை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தினர். அலெக்ஸால் பேச முடியவில்லை. நான்தான் கூறினேன். கதிரையில் கட்டிவைத்திருக்கும் போது தப்பியோட முயன்றதால் காயமென்றேன். அலெக்ஸை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி வைத்தியர் அறிவுறுத்தினார்.
பின்னர் நீதிபதியிடம் முற்படுத்தினர். எம்மை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
எங்களை சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். அலெக்ஸால் உடம்பு முடியாமலிருந்ததால், அவர் கீழ் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். நான் மேல் தளமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். பின்னர் அடுத்த சில நாட்கள் நடந்தது எனக்கு தெரியாது. பின்னர்தான் அறிந்தேன்- அலெக்ஸ் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் அழைத்து வரப்பட்டது.
அலெக்ஸ் இறப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்னர் ஒருவர் எம்மை தடுத்து வைத்துள்ள பகுதிக்கு வந்து, யார் துவா என விசாரித்தார். நான்தான் என போனேன். அங்கு அலெக்ஸ் இருந்தார். அவர் மிகவும் இயலாமல் இருந்தார். அவரை யாராவது கூடவேயிருந்து பராமரிக்க வேண்டும், நான் அதை செய்வேனா என்றார்கள். நான் சரியென கூறி, அலெக்ஸை நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேல் தளத்துக்கு அழைத்து சென்றேன்.
அடுத்த சில நாட்களும் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. கை அசைக்க முடியாது. அவர் உயிரிழந்த அன்று- 19ஆம் திகதி- படுக்கையிலேயே மலம் கழித்து விட்டார். சாரத்தை தோய்த்து, அவரை குளிப்பாட்டி படுக்க வைத்தேன். திடீரென அலெக்ஸ் பிஸ்கட் கேட்டார். எம்மிடம் பிஸ்கட் இருக்கவில்லை. அவரது கையை இடையிடையே தூக்கி வைக்க வேண்டும், என்னிடமும், நண்பர்களிடமும் அடிக்கடி கேட்பார். நான் தொடர்ந்து அவரை பராமரித்ததால், என்னை சிரமப்படுத்துவதாக நினைத்தோ என்னவோ, இன்னொரு நண்பரை பார்த்து தன்னை குளிப்பாட்டி, உடைமாற்றி விட முடியுமா என்றார். ஏற்கெனவே குளிப்பாட்டி விட்டதை நான் சொன்னேன். அலெக்ஸ் சிரித்தார்.
பின்னர், தான் இறக்கப் போவதாக சொன்னார். எங்களை அடித்த நபர்கள் பற்றிய விபரங்களை துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டுமென்றார்.
தனது கையை தூக்கி உடலில் வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்படி வைத்தோம். அப்படியே தூங்கி விட்டார். வழக்கத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை விழித்து, கையை அசைக்க உதவி கேட்பார். நீண்டநேரமாக தூங்குகிறாரே என்ற சந்தேகத்தில் அவரை நெருக்கமாக சென்று பார்த்தோம். உடல் குளிர்ந்திருந்தது. அசைவில்லை. எல்லோரும் கத்தி அழ ஆரம்பித்தார்கள். சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கினோம் என்றார்.