26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

இலங்கை தமிழர் குடியுரிமையே பறிபோய் இருக்க வேண்டும்: முன்னாள் எம்.பி திலகர்!

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்றதும் 1987 ஜே. ஆர்.ராஜீவ் ஒப்பந்தம் குறித்து மாத்திரம் பேசுவோர் 1954, 1964, 1974 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட இலங்கை- இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மூன்று ஒப்பந்தங்கள் குறித்து இலகுவாக மறந்து விடுகின்றனர். 1987 ஒப்பந்தம் இலங்கைத்தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காகச் செய்யப்பட்டது. அதற்கு முன்னதான மூன்றும் மக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகச் செய்யப்பட்டது. 1948 இல் பறிக்கப்பட்ட குடியுரிமையைக் கூட மீளப்பெற்றுவிட்டோம். ஆனால் மேற்படி ஒப்பந்தங்களினால் பிரிக்கப்பட்ட எமது உறவுகளையும் அரசியல் அதிகாரங்களையும் பெற முடியாது உள்ளோம். எனவே மலையகத்துக்கான அதிகார பகிர்வு என்பது வடகிழக்கு அதிகார பகிர்வில் இருந்து மாறுபட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்து உள்ளார்.

சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பொது நூல்கக் கேட்பகூடத்தில் இடம்பெற்றது. ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்தரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் உள்ளிட்ட அரசியல், கலை, இலக்கிய கல்விசார் ஆளுமைகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வின் தொடக்க உரையை மன்றத்தின் தலைவர் ச. மணிசேகரன் வழங்க தலைமையுரையை யுவன் ஆற்றினார். சிவம். பிரபாகரன், ஜீவன் ராஜேந்திரன் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இம்மாநாட்டில் பிரதான பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையக சமூகத்தின் 200 வருட வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் சோதனைகளையும் சாதனைகளையும் மதிப்பீடு செய்தவாறே மூன்றாவது நூற்றாண்டை நோக்கி நாங்கள் எவ்வாறு நகரப் போகிறோம் என்பதற்கான முனைப்பே மலையகம் 200 எண்ணக்கருவாகும். இன்று மலையகம் 200 ஐ பேசுவதற்கு மலையகம் 100 இல் பல கருமங்கள் ஆற்றப்பட்டு உள்ளன. 200 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மலையகம்’ என்ற ஒரு சொல்லே இருந்திருக்கவில்லை. இந்தச் சொல் உருவாக்கமானது ஒரு சமூக உருவாக்கத்தின் வெளிப்பாடு ஆகும். ஒரு புவியியல் சார் தோற்றப்பாடு இருந்த போதும் இன்று மலையகம் என்றவுடன் ஒரு மக்கள் தொகுதியினரின் இன அடையாளம் உலகின் முன் விரிகிறது. இதனைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது சகித்துக் கொள்ள முடியாத சிலர் ‘இந்திய வம்சாவளி 200 ‘ என்கிறார்கள். அப்படி ஒரு வம்சாவளி இலங்கைக்கு வந்து 2000 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தனைக் காலமாக அதனை மறந்திருந்த பலருக்கு அதில் 200 ஆண்டுகளை மட்டுமே ஏன் கொண்டாட நினைவு வந்தது என்பது விந்தையாக உள்ளது. இன்னும் சிலர் தங்களை இன்னும் அடையாளம் காணவே இல்லை. அதனால் ‘நாம்’ 200 என்கிறார்கள். அந்த நாம் நாமம் அவர்களுக்கு மட்டுந்தான். அது அந்த நாளோடு முடிந்து போனது.

மலையகம் 200 க்கு பின்னால் ஒரு தாற்பரியம் இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் பூச்சியத்தில் வாழ்வைத் தொடங்கி முதல் நூறு ஆண்டு காலம் முற்று முழுதாக அடிமை வாழ்வை வாழ நேர்ந்த ஒரு சமூகம் அடுத்த ஒரு நூற்றாண்டில் அரசியல், தொழிற்சங்க, கலை, இலக்கிய பண்பாட்டுத் தனித்துவங்கள் கொண்ட ஒரு தேசிய இனமாக தன்னை கட்டமைத்துக் கொண்டுள்ள வரலாறு இந்த மலையகம் 200 க்குள் இருக்கிறது. இரண்டாவது நூற்றாண்டில் முதல் இருபது வருட கால அரசியல் எழுச்சியின் ஊடாகப் இலங்கைக் குடியுரிமையைப் பெற்ற சமூகம் சுதேச அரசினாலேயே குடியுரிமையை பறித்த பேரிடருக்குள் விழுந்தது. அதற்கு சக தமிழ் சமூகமும் துணைபோன சோக வரலாறு உள்ளது. இலங்கையைப் பிரித்து தனிநாடு கோரிய இலங்கைத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கத் துணியாத இலங்கை சுதேச அரசு இலங்கைக்கு பொருளாதார பங்களிப்பை வழங்கிய மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்தது கொடுமையானது. அதற்கு காரணம் அவர்கள் கொண்டிருந்த ‘ இந்திய ‘ அடையாளமே.

இந்திய சுதந்திர போராட்ட நிலையில் அந்நியர்கள் என்போர் பிரித்தானியர் மட்டுமேயாகும். ஆனால் இலங்கை சுதந்திர போராட்ட மனநிலை பிரித்தானியர்கள், இந்தியர்கள் இருதரப்புமே ‘அந்நியர்’ என்பதாகும். இந்த மனநிலையே இந்தியர்களாகக் கருதப்பட்ட மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பறிப்புக்கு காரணமாகும் . இந்த மனநிலை குடியுரிமையை பறித்ததோடு நின்றுவிடவில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் அடுத்து வந்த மூன்று தசாப்த காலமாக இந்த மக்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டார்கள். இதற்க்காக 1954, 1964, 1974 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட இலங்கை- இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மூன்று ஒப்பந்தங்கள் குறித்து இலகுவாக மறந்து விடுகின்றனர். 1948 இல் பறிக்கப்பட்ட குடியுரிமையைக் கூட மீளப்பெற்றுவிட்டோம். ஆனால் மேற்படி ஒப்பந்தங்களினால் பிரிக்கப்பட்ட எமது உறவுகளையும் அரசியல் அதிகாரங்களையும் பெற முடியாது உள்ளோம். 1984 ஆம் ஆண்டு ராமானுஜம் கப்பல் நிறுத்தப்படும்வரை இந்திய அடையாளம் கொண்ட மலையகத் தமிழர்களை இலங்கையில் இருந்து நாடு கடத்தும் அவலம் கொத்து கொத்தாக நடந்தேறியது. இதனை கவிஞர். சிவி. வேலுப்பிள்ளை ‘ Human Cargo’ என வர்ணித்தார். மனிதர்களை மனிதர்களாக அன்றி பண்டங்களைப் போன்று பரிமாறிக் கொண்ட கொடுமையை இரண்டு அரசுகள் அரங்கேற்றின.

1984 ஆம் ஆண்டுகளில் ஊக்கம் பெற்ற உள்நாட்டு யுத்தம் இந்தியாவுக்கு பயிற்சிக்காகச் செல்லும் இளைஞர்களை மறைமுகமாக ராமானுஜம் காவிச் சென்றதால் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டதொடு இந்த நாடு கடத்தல் நிறைவுக்கு வந்தது. மறுபுறமாக 1948 ல் குடியுரிமைப் பறிப்புக்கு துணைபோன தமிழர் தரப்பு அதற்கு பிராய்ச்சித்தமாக 1986 ஆம் ஆண்டு திம்பு கோட்பாட்டின் ஓர் அம்சமாக ‘குடியுரிமை அற்ற தமிழர்களுக்கு’ அதனை வழங்க வேண்டும் ஒரு கோரிக்கையை முன்வைக்க மீளவும் குடியுரிமை வழங்கும் நடைமுறை காலத்துக்கு காலம் சட்டம் இயற்றப்பட்டு 2009 வரை வழங்கப்பட்டன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சட்டத்தைக் கொண்டு 1948 ஆம் ஆண்டு குடியுரிமையை பறித்தவர்கள் ஒன்பது (9) சட்டங்கள் ஊடாக 2009 வரை பகுதி பகுதி யாக பல்வேறு பெயர்களில் அதனை மீளவும் வழங்கினார்கள். இந்த நாடே இவர்களை நாடற்றவர்கள் என்றும் இந்திய வம்சாவளி என்றும் சட்டத்தில் குறித்தது. ஆனால் கால இடைவெளியில் தங்களது அரசியல், தொழிற்சங்க, கலை, இலக்கிய, பண்பாட்டு செயற்பாடுகளால் தங்களை ‘ மலையகத் தமிழர்கள்’ எனும் தேசிய இனமாக வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

இப்போது அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள ‘இலங்கைக் குடியுரிமையை’ கேள்விக்கு உட்படுத்துகின்றார்கள். அர்த்தம் உள்ள குடியுரிமையை கோரி நிற்கிறார்கள். இந்த அர்த்தமுள்ள குடியுரிமைக் கோரிக்கையை வலியுறுத்தியே மலையகம் 200 எண்ணக்கரு முன் வைக்கப்படுகிறது. தமக்கான காணி, வீடு, முகவரி, கல்வி, சுகாதாரம், பாதை, போக்குவரத்து, என அரசினால் மறுக்கப்பட்டு வரும் பல உரிமைகளை வெனலறெடுக்கும் பாரிய பொறுப்பு மலையக இளைய தலைமுறையினர் வசம் உள்ளது, மலையகம் 100 இல் நடேசய்யர் மீனாட்சியம்மை தம்பதியர் ஆற்றிய அரசியல் பணிகள் காரணமாகவே இன்று மலையகம் 200 இல் பேசுவதற்கு அரசியல் இருக்கிறது. அதே வகிபாகத்தை இன்றைய அரசியல் பின்புலச் சூழலுக்கு ஏற்றாற் போல முன்கொண்டு செல்ல இளைய மலையகத்தவர் திடசங்கட்பம் கொண்டுள்ளார்கள்.

அதிகார பகிர்வு சார்ந்து வடக்கு கிழக்கு தலைமைகள் தீர்மானங்களை எடுக்கும் போது மலையக சமூகத்தின் அரசியலைப் புரிந்து கொண்டு செயற்பட முன்வர வேண்டும். 1987 ஆம் ஆண்டு மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கு துணையாக அதுவரை நடைமுறையில் இருந்த ‘கம்சபா’ முறைமை நீக்கப்பட்டு பிரதேச சபை முறைமை கொண்டுவரப்பட்டது. பிரதேச சபைச் சட்டம் கொண்டு இயற்றப்பட்டது. ஏற்கனவே கம்சபா முறைமையில் உள்வாங்கப்பட்டிருக்காத மலையகப் பெருந்தோட்ட பகுதிகள் பிரதேச சபைச் சட்ட உருவாக்கத்தின்போதும் உள்வாங்கப்படவில்லை. எனவே மலையகப் பெருந்தோட்டம் சார்ந்து வாழும் சுமார் பத்து லட்சம் அளவான மக்கள் பிரதேச சபை உரிமை மறுப்புக்கு உள்ளாகினர். இங்கு தமக்கு மாகாண சபை முறைமை ஊடாக அதிகாரத்தை எதிர்பார்த்த இலங்கைத் தமிழர் தரப்பு இதன்போது கொண்டுவரப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தில் சக தமிழ் சமூகமான பிரதேச சபை முறைமையிலும் கூட உள்வாங்கப்படாமல் விடப்படுகின்றனர் என்பதை கிஞ்சித்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இத்தகைய பாராமுகம் குறித்து இதுவரை எவரும் வருத்தம் தெரிவக்கவோ மாற்று நடவடிக்கையோ எடுக்கவும் இல்லை. ஆனால் மலையக மக்களது அரசியல் சார்ந்து பேசுவார்கள் எந்த அர்த்தமும் இல்லாமல். 2018 ஆம் ஆண்டு சட்டத் திருத்தங்கள் ஊடாகவே பிரதேச சபையில் பங்கேற்கும் உரிமையை மலையகப் பெருந்தோட்ட மக்கள் சட்டரீதியாகப் பெற்றுக் கொண்டோம்.

எனவே அதிகார பகிர்வு சார்ந்த விடயங்களில் சக சமூகங்களான இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடுகளைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமது அதிகார பகிர்வு தீர்மானங்கள் எடுப்பதற்கும் மலையக மக்கள் முன்வைக்கும் அதிகாரப் பகிர்வு தீர்மானங்களுக்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை எடுக்கவும் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

Leave a Comment