வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (21) தண்டனை விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம், அறிவித்துள்ளது.
அதன்படி, பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்தில் இன்று பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியின் வயது, மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும் என்று கோரியதாகத் தகவல்.
வழக்கு பின்னணி
தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கடந்த 2011ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர், விழுப்புரம்மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு கடந்த 2015-ம் ஆண்டுமாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில்பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றுகூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2016 ஏப்ரல் 18ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில்கடந்த 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.
அப்போது, பொன்முடி தரப்பில், ‘மனைவி விசாலாட்சிக்கு சொந்தமாக பல ஏக்கரில் விவசாய நிலமும், தனியாகவணிகமும் நடந்து வருவதால், அதில்கிடைத்த வருமானத்தையும், என் வருமானத்துடன் ஒன்றாக சேர்த்துள்ளனர். புலன்விசாரணை அதிகாரி இதைகவனத்தில் கொள்ளவில்லை. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால்தான் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது’ என்று வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், ‘பொன்முடி, விசாலாட்சிக்கு எதிரான வருமானவரி கணக்குகள், சொத்து விவரங்கள்,வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன், மொத்தம் 39 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. எனவேஅந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.
இந்நிலையில் அவர்களுக்கான தண்டனை விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.