தனது பெற்றோரின் உடல்நலனை கவனித்துக்கொள்ளவும், குழந்தைகளின் படிப்புக்காகவும் தற்காலிகமாக மும்பைக்கு குடிபெயர்ந்திருப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கரோனா காலக்கட்டத்தில் அம்மா – அப்பாவுக்கு 2, 3 முறை கோவிட் வந்தது. அப்போது விமான சேவை இல்லாததால் என்னால் அங்கு செல்ல கூட முடியவில்லை. அந்த சமயத்தில் யோசித்தேன். 25 வயதிலிருந்து நான் சென்னையில்தான் இருக்கிறேன். என் பெற்றோருடன் நான் இருந்த காலங்கள் குறைவு. திருமணத்துக்குப் பின் பெண்கள் தங்கள் பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிவதில்லை. திருமணத்துக்குப்பின் பொறுப்புகள் கூடிவிடுவதால் அதனை விட்டு பெற்றோர்களுடன் நேரம் செலவழிப்பது குறைந்துவிடுகிறது.
சிறிது நாள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதால் மும்பைக்கு மாறினேன். இது ஒரு தற்காலிக முடிவுதான். குழந்தைகளுக்கும் பள்ளி செல்ல வசதியாக உள்ளது. சூர்யா எப்போதும் சப்போர்டாக இருப்பார். நான் சந்தோஷமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சரியாக இருக்க வேண்டும் என நினைத்தார். இப்படித்தான் இருக்க வேண்டும் என எப்போதும் நினைக்க மாட்டார்” என்றார்.