யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக் களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றனர்.
யாழ்ப்பாணம் – கீரிமலையில் மஹிந்த ராஜபக்ச காலத்தில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்ட பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம்(15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இன்று முதல் தொடர்ச்சியாக அளவீடு இடம்பெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.