யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது சகோதரியின் மகன் மீது வழக்கொன்று நிலுவையில் உள்ளது. அந்த இளைஞன் வெளிநாடு செல்வதற்காக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவிருந்தது. இதன்போது, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தரும் நீதிமன்றத்துக்கு வந்து, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.
இதன்போது, அவர் வைத்திருந்த திறப்பு ஒன்று கீழே விழுந்து அதிக சத்தம் எழுப்பியுள்ளது. அருகில் நின்ற நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் அங்கு சென்று, குனிந்து திறப்பை எடுக்க முற்பட்ட போது, மது வாடை வீசியது.
குறிப்பிட்ட நபரை அழைத்து விசாரித்த போது, அவர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதும், நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்னதாக உற்சாக பானம் அருந்தியதும் தெரிய வந்தது.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபரை நாளை செவ்வாய்க்கிழமை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.